ஒரே மாதத்தில் இரண்டு 100 கோடி படங்கள் – அசத்தும் மலையாள சினிமா!
ஜனவரி மாதம் வெளியான ஆபிரகாம் ஓஸ்லெர் படத்தின் வெற்றியுடன் மலையாள சினிமாவுக்கு 2024 ம் ஆண்டு தொடங்கியது. ஜெயராம் நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் மம்முட்டி சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தார். 6 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் அதைவிட பல மடங்கு வசூலித்தது.
பிப்ரவரி 9 பிரேமலு திரைப்படம் வெளியானது. ஹைதராபாத்தை மையப்படுத்திய காதல் கதையான இதில் இளம் நடிகர் நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு ஆகியோர் நடித்திருந்தனர். ஃபகத் பாசில், தில்லீஸ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் இணைந்து படத்தைத் தயாரித்திருந்தனர். படத்தை இயக்கிய க்ரிஷ் ஏடி, தண்ணீர் மத்தன் தினங்கள், சூப்பர் சரண்யா போன்ற வெற்றிப் படங்களை தந்தவர்.
பிரேமலு திரைப்படம் உலக அளவில் 75 கோடிகளை தாண்டி வசூலித்துள்ளது. இன்றும் கேரளாவில் தினசரி 1 கோடிகள் வசூலித்து வரும் படம் சில தினங்களில் 100 கோடியை எட்டும் என கணித்திருக்கிறார்கள். எஸ்எஸ் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா பிரேமலு படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியுள்ளார். படம் விரைவில் தெலுங்கில் வெளியாக உள்ளது.
பிப்ரவரி 22 வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் முதல் நாளிலிருந்தே வசூலை குவித்து வருகிறது. இதுவரை உலக அளவில் 80 கோடிகளை படம் வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் படம் 100 கோடியைத் தாண்டும். தமிழ்நாட்டிலும் படத்திற்கு மிகப்பபெரிய வரவேற்பு கிடைத்திருப்பது எதிர்பாராத சர்ப்ரைஸ்.
பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் இரண்டும் 100 கோடிகளைத் தாண்டவிருப்பது மலையாள சினிமாவின் சாதனை. இதற்கு முன் 2018, புலி முருகன், லூசிபர் ஆகிய 3 படங்கள் மட்டுமே 100 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளன. இந்தப் பின்னணியில் ஒரே மாதத்தில் இரு படங்கள் 100 கோடிகளை தாண்டுவது மலையாள சினிமாவின் வர்த்தக வெற்றியையும், அவர்கள் படங்களின் தரத்தையும் எடுத்துக் காட்டுகிறது.
இவை தவிர பிப்ரவரி மாதம் வெளியான டொவினோ தாமஸின் அன்னேஷிப்பின் கண்டெத்தும், மம்முட்டியின் பிரமயுகம் படங்களும் போட்ட பட்ஜெட்டைவிட அதிகம் வசூலித்து, வர்த்தக வெற்றியை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.