தலைவர் பதவியிலிருந்து விலகும் ஆர்.கே.செல்வமணி – அதிர்ச்சியில் திரையுலகம்!
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, வருகிற 16 ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போது சங்கத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஆர்.கே.செல்வமணி இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இருப்பதுடன், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (ஃபெப்சி) தலைவராகவும் இருக்கிறார். இவ்விரு பொறுப்புகளையும் அதிக குற்றச்சாட்டுகள் இல்லாமல் திறம்பட வகித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 21 ம் தேதி இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூடிய போது, செல்வமணி உள்ளிட்ட நடப்பு நிர்வாகிகள் மீது எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை. வருகிற தேர்தலில் இதே நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலையே காணப்பட்டது. இந்நிலையில், வருகிற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று செல்வமணி அவராகவே அறிவித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபெப்சியின் அங்கமான 24 சங்கங்களில் ஏதாவது ஒன்றில் நிர்வாகியாக இருப்பவர் மட்டுமே ஃபெப்சியின் தலைவராக முடியும். செல்வமணி இயக்குநர்கள் சங்க தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அவரால் ஃபெப்சி தலைவர் பதவியில் நீடிக்க முடியாது.
செல்வமணி தலைவரான பிறகு திரையுலகின் சிக்கல்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டு வந்தன. பணம் கையாடல் போன்ற புகார்களும் இல்லை. சமீபமாக அவர் எந்தப் படவேலைகளிலும் ஈடுபடவில்லை என்பதால் முழுநேரமும் சங்க வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், திரையுலகமும் கவலையற்று இருந்தது.
அவர் திடீரென, வரும் தேர்தலில், புதியவர்களுக்கு வழிவிட்டு, தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
செல்வமணியின் மனைவி நடிகை ரோஜா ஆந்திராவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உதவியாக செல்வமணியும் ஆந்திராவில் செட்டிலாகப் போகிறார், அதனால்தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும், செல்வமணி மீண்டும் தலைவராகாதபட்சத்தில், இயக்குநர்கள் சங்கம், ஃபெப்சி என இரண்டு சங்கங்களும் வலிமையான தலைவரை இழக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.