பணம் வாங்கிகொண்டு விசா இல்லாமலே புலம்பெயர்வோரை கனடாவுக்கு அனுப்பிவந்த நபர்: மேலதிக தகவல்கள்
பிரித்தானியாவில் விமான நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றிவந்த ஒருவர், பணம் வாங்கிக்கொண்டு விசா இல்லாமலே புலம்பெயர்வோரை கனடாவுக்கு அனுப்பிவந்தது தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணம் வாங்கிகொண்டு புலம்பெயர்வோரை கனடாவுக்கு அனுப்பிவந்த நபர்
பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவந்துள்ளார் ஒருவர்.
அவர், இந்தியர்களிடம், ஆளுக்கு 25,000 பவுண்டுகள் அல்லது 26 லட்ச ரூபாய் (இந்திய மதிப்பில்) வாங்கிக்கொண்டு, அவர்களை லண்டனிலிருந்து கனடா செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் ஏற்றி அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, அவர் 3 மில்லியன் பவுண்டுகள் அல்லது சுமார் 31 கோடி ரூபாய் வரையில் பெற்றுக்கொண்டு புலம்பெயர்தல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி கனடா வந்தவர்கள், உடனடியாக புகலிடக்கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மேலதிக தகவல்கள்
பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், ஜனவரி மாதம் 6ஆம் திகதி பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளிவந்தபோது, அவரது காதலி அல்லது மனைவி என கருதப்படும் ஒரு பெண்ணுடன், இந்தியாவுக்குத் தப்பியோடி, இந்தியாவில் தலைமறைவாக உள்ளார்.
அந்தப் பெண்ணும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானத்துக்கு வெளியே பணி செய்யும் பணியாளராக இருந்துவந்துள்ளார்.
அவர்கள் இருவரும் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், அந்த நபர் குறிப்பாக கனடா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கே உதவியதாகத் தெரிகிறது.
அதாவது, அந்த இந்தியர்கள் முறைப்படி அனுமதி பெற்று பிரித்தானியா வந்துள்ளார்கள், பிரித்தானியாவில் முறைப்படி அனுமதியுடன் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் நோக்கம் கனடா செல்வது.
அத்தகையோரும், பிரித்தானியாவில் தங்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படலாம், தாங்கள் நாடுகடத்தப்படலாம் என அஞ்சுவோரும், கனடா செல்ல இந்த நபர் முறைகேடாக உதவியுள்ளார் என பிரித்தானிய அரசு வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.