காலையில் ஆரோக்கிய உணவு.. இஞ்சியும், கொண்டைக்கடலையும் இருந்தால்போதும்.. சிம்பிள் ரெசிபி!!
தினமும் காலையில் நாம் சாப்பிடும் உணவு தான் நமது முழு நாளையும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட வைக்கிறது. பெரும்பாலான மக்கள் காலை டீ , காபி, ஜூஸ் போன்ற பானங்களுடன் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள், ஆனால் உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் உங்கள் நாளை தொடங்குவது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் ஒரு கையளவு கொண்டைக்கடயை, துருவிய இஞ்சியுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உங்கள் நாளை ஆரோக்கியமானதாக மாற்றலாம். காலை நேரத்தில் கொண்டைக்கடலை மற்றும் இஞ்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்ளவோம்.
இஞ்சி:
இஞ்சி அதன் செரிமான பண்புகளுக்கு பெயர் பெற்றது. தினமும் காலையில் இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வதால், உமிழ்நீரைத் தூண்டி இரைப்பை சுருக்கங்களை விரிவாக்க இது உதவும். இதனால் செரிமானம் சீராக நடைபெறுவது மட்டுமின்றி, குமட்டல் உணர்வும் கட்டுக்குள் வரும்.
இஞ்சியில் ஜிஞ்சரால் போன்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளன. எனவே அடிக்கடி இஞ்சியை தவறாமல் உட்கொள்வது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும், அழற்சி பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும்.
இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே தினமும் காலையில் இஞ்சி சாப்பிடுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இஞ்சி நமது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும். தினமும் காலையில் இஞ்சி சேர்த்து சாப்பிடுவதால், ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு மண்டலமும் ஆரோக்கியமாக இருக்கும். இஞ்சியை தனியாக சாப்பிட முடியாது என்பதால் இஞ்சியை தேநீர், சட்னி, துவையல், கொண்டைக்கடலை சாலட் போன்ற ரெசிபிகளாக செய்து சாப்பிடலாம்.
கருப்பு கொண்டைக்கடலை :
கறுப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. தினமும் காலையில் அரை கப் அளவு கருப்பு கொண்டைக்கடலை சாப்பிடுவதால் நமது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதாவது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னையை சரி செய்ய உதவுகிறது. எனவே தினமும் காலையில் தோலுடன் கருப்பு கொண்டைக்கடலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தடுக்க முடியும்.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
தினமும் இரவு ஒரு கைப்பிடி அளவு கொண்டைக்கடலை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும். சுமார் 8 மணி நேரம் ஊறிய பின்னர் மறுநாள் அதனை எடுத்து சாப்பிடலாம். அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் வேக வைத்து, கடுகு, கருவேப்பிலை, துருவிய இஞ்சி, உப்பு சேர்த்து சாப்பிடலாம்.