பாஜக போடும் ஸ்கெட்ச்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு; பிரதமர் மோடி மீண்டும் வாரனாசியில் போட்டி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்டவணையை இந்த மாதம் மத்தியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், 100 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் வேட்பாளர் பட்டியல் நேற்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக இரவு 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் அதிகாலை 4 மணிக்குத்தான் முடிவடைந்துள்ளது.
எனவே, பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட 100 பேர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. மார்ச் மாதம் 10ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் மொத்தமுள்ள தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலின்போதும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அதாவது மார்ச் மாதம் 21ஆம் தேதி 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டால், அவர்கள் தற்போதே அந்தந்த தொகுதிகளில் வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது பாஜகவின் வியூகங்களில் ஒன்று.
மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ள பாஜக, சிட்டிங் எம்பிக்களின் கருத்துகளைப் பெறுவது, அடிமட்ட அளவில் தொண்டர்களின் கருத்துக்களை பெறுவது, அவர்களது தொகுதிகளில் வாக்காளர்களுடன் கலந்துரையாடுவது, ஆட்சிக்கு எதிரான மனநிலையை அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.
தொகுதி பங்கீடுபேச்சுவார்த்தையை பல்வேறு மாநிலங்களில் இன்னும் முடிக்காத எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்க்காமல், தங்களது வேட்பாளர்களில் ஒரு பகுதியை வெளியிட பாஜக விரும்புவதாக நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்தி பேசும் மாநிலங்கள், தென் மாநிலங்கள் மீது கவனம்
பாஜக மேலிடம் நேற்று இரவு முதல் விடியவிடிய நடைபெற்ற கூட்டத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இந்தி பேசும் மாநிலங்களிலும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் வேட்பாளர்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல், பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத தென் மாநிலங்களான கேரளா, கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளன. பஞ்சாபில் அகாலி தளம், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் மீண்டும் உறவை புதுப்பிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதேசமயம, ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் கட்சி – ஜன சேனா கூட்டணியில் ஒன்றை பாஜக தேர்ந்தெடுக்க வேண்டும்.
முதல் பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா?
பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரது பெயர்கள் இடம்பெறும் என தெரிகிறது. 1991ஆம் ஆண்டு முதல் பாஜகவின் கோட்டையாக இருக்கும் வரானாசியில் (2004இல் மட்டும் காங்கிரஸ் வெற்றி) பிரதமர் மோடி மீண்டு போட்டியிடுவார் என தெரிகிறது. 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தல்களில் வாரனாசி தொகுதியில் பிரதமர் மோடி அபார வெற்றி பெற்றுள்ளார். முதல் தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், இரண்டாவது தேர்தலில் கிட்டத்தட்ட 4.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
அதேசமயம், அவரது ஹாட்ரிக் வெற்றியை தடுக்கும் வகையில், இந்தியா கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. முன்னதாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்தியா கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக் கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார்.
பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டிலும் அவர் களம் காணவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தவிர்த்து விட்டார். தற்போதும், அவரது வருகை உறுதிபடுத்தப்படவில்லை. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலியில் போட்டியிடுவதில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விலகியுள்ளது பிரியங்கா மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் இருந்து அமித் ஷா போட்டியிடலாம் என தெரிகிறது. 1989ஆம் ஆண்டு முதல் எல்.கே.அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்ற பாஜக பிரமுகர்களை மக்களவைக்கு அனுப்பிய தொகுதி குஜராத்தின் காந்தி நகர். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட அமித் ஷா 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மற்ற பெரிய வேட்பாளர்கள்?
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப்பிரதேசத்தின் குணா-சிவ்புரியில் போட்டியிடலாம். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவும் பாஜகவின் கோட்டைதான். 1991 முதல் 2004 வரை இந்த தொகுதியில் வாஜ்பாய் வசம் இருந்தது. 2014 முதல் இந்த தொகுதியின் எம்.பி.யாக ராஜ்நாத் சிங் உள்ளார். அதேபோல், மத்தியப்பிரதேசத்தின் குணா-சிவ்புரி ஜோதிராதித்ய சிந்தியா குடும்பத்தின் கோட்டை. 1952இல் நடந்த முதல் தேர்தலில் இருந்து சிந்தியா அரச குடும்பம் 14 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
அஸ்ஸாமின் திப்ருகரில் இருந்து முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் போட்டியிடலாம். இந்த தொகுதியில் அவர் 2004 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங்கிற்கு போபால் தொகுதி வழங்கப்படலாம். எனவே, அந்த தொகுதி எம்பி பிரக்யா தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு இடம்
80 எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்பும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசத்தில் 6 இடங்களை, அப்னா தளம் மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் ராஷ்ட்ரிய லோக்தளம் போன்ற பிராந்திய கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதில், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி இந்தியா கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக கூட்டணியில் அண்மையில் ஐக்கியமானது. மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாக, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 100 பேர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. மார்ச் மாதம் 10ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் மொத்தமுள்ள தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலின்போதும், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அதாவது மார்ச் மாதம் 21ஆம் தேதி 164 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டது என்பது கவனிக்கத்தக்கது