டியர் 90ஸ் கிட்ஸ்.. உங்களுக்கு பிடிச்ச ரஸ்னா இப்பவும் டாப்தான்! 1000 கோடி மதிப்புள்ள கம்பெனி வரலாறு

சென்னை: சுதந்திர இந்தியாவில் குழந்தைகளுக்கான பானமாக உருவாகி இன்றளவும் இந்திய சந்தையில் உச்சத்தில் இருக்கிறது ரஸ்னா நிறுவனம். அது மட்டுமல்ல குழந்தைகளுக்கு எல்லாம் பிடித்த ஒரு பானமாகவும் நீடித்து நிற்கிறது.

சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் இந்தியர்கள் பாரம்பரிய பானங்களுக்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை சேர்ந்த பானங்களை அருந்த விரும்பினர். அப்போது 13 வயதான அரீஸ் கம்பட்டா மாட்டு வண்டியில் சென்று சோடா விற்பனை செய்து வந்தார். தந்தையுடன் ஒருநாள் விவாதித்துக் கொண்டிருந்தபோது இந்தியாவில் குழந்தைகளுக்கான ஒரு பானம் இல்லை என்பதை உணர்ந்தார் அரீஸ்.

சந்தையில் கிடைக்கும் மற்ற பானங்களும் ரசாயனம் சேர்க்கப்பட்டு, ஆரோக்கியமற்றதாக இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். எனவே ரசாயனம் சேர்க்காத மக்களே மிக்ஸ் செய்து கொள்ள கூடிய ஒரு பானத்தை அறிமுகம் செய்தார். இப்படி தான் 1979 ஆம் ஆண்டு ரஸ்னா என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் வீடு வீடாக சென்று மக்களுக்கு ரஸ்னா பாக்கெட்டுகளை விநியோகம் செய்தார் அரீஸ்.

குழந்தைகளுக்கான பானம் ரஸ்னா: 1980 களில் இந்தியாவில் தம்சப் மற்றும் கோகோ கோலா வருகை தர தொடங்கியது. ஆனால் 8 முதல் 20 வயது உள்ள குழந்தைகளுக்கான குளிர்பானங்கள் எதுவும் அப்போது சந்தையில் இல்லை. எனவே ஐ லவ் யூ ரஸ்னா என்ற விளம்பரத்தை முன் வைத்தார் அரீஸ். ஐந்து ரூபாய் ரஸ்னா பேக் வாங்கினால் 32 கிளாஸ் குளிர்பானத்தை தயாரிக்க முடியும் என அவர் செய்த விளம்பரம் மக்களிடையே செம ஹிட்டானது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களின் விருப்பமான பானமாக ரஸ்னா மாறியது. சிறு சிறு கடைகள் வைத்திருந்தவர்கள் ரஸ்னா பவுடரை வாங்கி , ஜூஸ் போட்டு பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய தொடங்கினர்.

ரஸ்னா விற்பனை: சர்க்கரை சேர்க்கப்படவில்லை என்பது தான் ரஸ்னா மக்களின் பிடித்தமான பானமாக மாற மற்றொரு காரணம். இந்த யுக்தி ரஸ்னா தயாரிப்புக்கான தொகையில் 60% ஐ குறைத்தது. கோடை காலங்களில் ரஸ்னா மக்களிடம் மிகவும் பிரபலமானது. “ஐ லவ் யூ ரஸ்னா..” என்பது பரவலாக சிறுவர்களின் முழக்கமாக மாறியது.

இதனை அடுத்து 2 ரூபாய் பாக்கெட்டுகள் விற்பனை செய்ய தொடங்கினார் . 1980களில் இந்தியாவின் 50 விழுக்காடு சந்தையை ரஸ்னாவே ஆக்கிரமிப்பு செய்திருந்தது. காலத்துக்கு ஏற்ப ரஸ்னா பல்வேறு ஃப்ளேவர்களில் வெளிவர தொடங்கியது.

பன்னாட்டு நிறுவனங்கள்: 1992 ஆம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனம் தம்ஸ் அப் மற்றும் கோல்ட் ஸ்பாட் ஆகிய பிராண்ட்களை கைப்பற்றியது. அப்போது பெப்சி, ரஸ்னாவை கைப்பற்ற முன்வந்தது. ஆனால் அரீஸ் அதற்கு ஒத்துழைக்கவில்லை. குழந்தைகள் தான் அவருடைய வாடிக்கையாளர்கள் என்பதை உணர்ந்து குழந்தை நட்சத்திரங்களைக் கொண்டு குழந்தைகளுக்கான பிறந்தநாள் பார்ட்டிகளில் ரஸ்னா தான் சிறந்த பானம் என்பது போன்ற விளம்பரங்களை செய்ய தொடங்கினார்.

கோகோ கோலாவை தோற்கடித்த ரஸ்னா: 2002இல் கோகோ கோலா நிறுவனம் ரஸ்னாவை போலவே சன் ஃபில் என்ற பானத்தை அறிமுகம் செய்தது. ஆனால் சந்தையில் தாக்கு பிடிக்க முடியாமல் இரண்டே ஆண்டுகளில் தோல்வியை ஒப்புக் கொண்டது. தற்போது இந்தியாவின் 1.8 மில்லியன் கடைகளில் ரஸ்னா விற்கப்படுகிறது. 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரஸ்னா நிறுவனம் அரீஸ் கம்பாட்டாவுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. அரீஸ் கம்பாட்டா மறைந்தாலும் அவர் உருவாக்கிய ரஸ்னா கோடிக்கணக்கானவர்களை குளிர்வித்து வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *