தோனியின் இடத்தை இளம் வீரர் நிரப்புவார்.. டெக்னிக்கலாகவும் அவர் சிறந்த பேட்ஸ்மேன்.. கும்ப்ளே பாராட்டு
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியின் இடத்தை இளம் வீரர் துருவ் ஜுரெல்லால் நிரப்ப முடியும் என்று அனில் கும்ப்ளே கணித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் சேர்த்து அசத்திய துருவ் ஜுரெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் சர்வதேச அளவில் துருவ் ஜுரெல் கவனம் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் அத்தனை வீரர்களும் பிரஷர் கொடுத்தாலும், கொஞ்சம் கூட எந்த பிரச்சனையும் இல்லாமல் பேட்டிங் செய்து அசத்தினார் துருவ் ஜுரெல். டெக்னிக்கலாகவும் சிறந்த பேட்ஸ்மேனாக காணப்படும் துருவ் ஜுரெல், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களுக்கு எதிராக மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ரிஷப் பண்ட் காயம் காரணமாக 16 மாதங்களாக ஓய்வில் இருக்கும் சூழலில், இந்திய அணிக்காக கேஎஸ் பரத், கேஎல் ராகுல், இஷான் கிஷன் என்று பல்வேறு விக்கெட் கீப்பர்கள் செயல்பட்டனர். இதில் விக்கெட் கீப்பிங் சிறப்பாக செய்தால், பேட்டிங் வராமலும், பேட்டிங் சிறப்பாக செய்தால் விக்கெட் கீப்பிங் சொதப்பலாகவும் அமைந்தது. ஆனால் துருவ் ஜுரெல் இரண்டிலும் அசத்தி இருக்கிறார்.
இதனால் தோனியின் தீவிர ரசிகரான துருவ் ஜுரெல், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது இடத்தை எளிதாக நிரப்புவார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதிலும் ராஞ்சி மைதானத்திலேயே துருவ் ஜுரெல் இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அனில் கும்ப்ளே பேசுகையில், தோனி படைத்த சாதனைகளையும், உயரத்தையும் துருவ் ஜுரெல்லாலும் எட்ட முடியும். அதற்கான திறமை அவரிடம் பார்க்க முடிகிறது. பிரஷரில் சிறப்பாக ஆடியது மட்டுமல்லாமல், டிஃபென்ஸ் மற்றும் அட்டாக்கில் அசத்துகிறார்.
முதல் இன்னிங்ஸில் கூட ஒவ்வொரு முறையும் பெரிய ஷாட்களை நம்பிக்கையுடன் விளாசினார். அதிலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அசத்தி வருகிறார். நிச்சயம் வரும் காலங்களில் திறமைகளை இன்னும் வளர்த்து கொள்வார். 2வது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுகிறார் என்பதால், அவருக்கு இன்னும் அதிகளவிலான வாய்ப்புகள் கிடைக்கும். அது இந்திய அணிக்கு நன்மையாக இருக்கும். அவரை சரியான நேரத்தில் இந்திய அணிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பாராட்டியுள்ளார்.