AFG vs IRE: மாபெரும் வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து.. இந்திய அணியையே மிஞ்சிய பிரம்மாண்ட ரெக்கார்டு
துபாய் : ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தன் முதல் டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்து இருக்கிறது அயர்லாந்து அணி. இதன் மூலம், இந்தியா, தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து போன்ற சிறந்த டெஸ்ட் அணிகள் கூட தங்கள் ஆரம்ப காலங்களில் செய்ய முடியாத சாதனையை செய்து இருக்கிறது அயர்லாந்து அணி.
இதுவரை ஏழு டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருந்த அயர்லாந்து அதில் ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மோதியது. இதற்கு முன் ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை டெஸ்ட்டில் வீழ்த்தி இருந்தது. எனவே, அதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்தது அயர்லாந்து அணி.
இந்த நிலையில் இந்த இரு அணிகளும் மோதிய டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் – அவுட் ஆனது. அயர்லாந்து அணியின் மார்க் அடேர் 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
அடுத்து பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் குவித்தது. பால் ஸ்டிர்லிங் 52, கர்டிஸ் 49, லோர்கான் டக்கர் 46 ரன்கள் குவித்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணியின் ஜியா உர் ரஹ்மான் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். அதன் பின் 108 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 218 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து அணிக்கு 111 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான். இந்த சேஸிங்கில் அயர்லாந்து அணி 13 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த போதும் துவக்க வீரர் ஆன்டி பால்பிர்னி 58 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
தனது எட்டாவது போட்டியில் அயர்லாந்து அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் தன் முதல் டெஸ்ட் வெற்றிக்கு குறைந்த போட்டிகளை எடுத்துக் கொண்ட அணிகளின் பட்டியலில் ஆறாவது இடம் பெற்றது. இந்தப் பட்டியலில் இந்தியா 10வது இடத்தில் இருக்கிறது. இந்திய அணி தன் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ய 25 போட்டிகளை எடுத்துக் கொண்டது. தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளையும், நியூசிலாந்து 45 போட்டிகளையும் எடுத்துக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அயர்லாந்து அணி டெஸ்ட் வரலாற்றில் முத்திரை பதித்து இருக்கிறது.
முதல் டெஸ்ட் வெற்றிக்கு குறைந்த போட்டிகளை எடுத்துக் கொண்ட அணிகளின் பட்டியல் –
ஆஸ்திரேலியா – 1
இங்கிலாந்து – 2
பாகிஸ்தான் – 2
ஆப்கானிஸ்தான் – 2
வெஸ்ட் இண்டீஸ் – 6
அயர்லாந்து – 8
ஜிம்பாப்வே – 11
தென்னாப்பிரிக்கா – 12
இலங்கை – 14
இந்தியா – 25
வங்கதேசம் – 35
நியூசிலாந்து – 45