ஹர்திக் பாண்டியா செல்லப்பிள்ளை அதான் இப்படி.. பிசிசிஐ-யின் இரட்டை முகம்.. விளாசிய ரசிகர்கள்
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மட்டும் தனி விதிகள், மற்ற வீரர்களுக்கு தனி விதிகளா? என பிசிசிஐ-யின் பாரபட்சமான முடிவுகளை கேள்வி கேட்டு விளாசி வருகின்றனர் ரசிகர்கள்.
சமீபத்தில் பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர். இத்தனைக்கும் இந்த ஒப்பந்தம் அக்டோபர் 2023 முதல் செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டத்திற்கு அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் முதல் ஜனவரி 2024 வரை அவர்கள் இருவருமே பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று இருக்கின்றனர். அணியிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர்.
ஆனால், அவர்கள் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் பங்கேற்கவில்லை என்ற காரணத்தை முன் வைத்து பிசிசிஐ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பிசிசிஐ ஒப்பந்தம் உடைய எந்த வீரராக இருந்தாலும் அவர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடாத நேரத்தில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பிசிசிஐ அழுத்தமாக கூறி இருக்கிறது.
ஆனால், ஹர்த்திக் பாண்டியா இந்திய அணியில் இடம் பெற்ற பின் கடந்த 5 – 6 ஆண்டுகளில் மிகச் சில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். கடந்த ஆண்டு முழுவதும் அவர் எந்த உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஹர்திக் பாண்டியா சர்வதேச டெஸ்ட் அணியில் இடம் பெறுவதில்லை என்பதால் அவர் உள்ளூர் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில்லை.
டெஸ்ட் தொடரில் தான் பங்கேற்பதில்லை என்றால் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் மற்றும் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரிலும் அவர் பங்கேற்பதில்லை. ஆனாலும், அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் இனி வரும் காலங்களில் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதாக உறுதி அளித்ததாக பிசிசிஐ தரப்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி என்றால் இதே போன்ற உத்தரவாதத்தை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனிடம் இருந்து பெற்று அவர்களுக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் அளித்து இருக்கலாமே? ஒரு வகையில் பிசிசிஐ தனது செல்லப் பிள்ளையான ஹர்திக் பாண்டியாவுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்பதே உண்மை.