மேட்ரிமோனி மூலம் 259 பெண்களிடம் மோசடி.. பலே ஆசாமி கைது!

கோவையைச் சேர்ந்த இளம் விதவை ஒருவர் மறுமணம் செய்வதற்காக மேட்ரிமோனி இணையதளங்களில் பதிவு செய்து வைத்திருந்தார். அப்போது அவருக்கு இணையதளம் மூலம் அறிமுகமான வரன் ஒருவர், தான் பெங்களூரு விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக இருப்பதாகவும், விதவை ஒருவரை மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண்ணும் அவருடன் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார். அப்போது தனக்கு 25 வயது எனவும், ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட தான் பெங்களூருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரு வருமாறு அப்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அப்பெண்ணும் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்ற போது, தனக்கு அவசர வேலை இருப்பதால், தனது மாமா அவர்களை வந்து சந்திப்பார் என போன் மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை மற்றொரு எண்ணில் தொடர்பு கொண்ட 45 வயது மதிக்கத்தக்க ஒருவர், நேரில் சென்று அப்பெண் குடும்பத்தினரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, மணமகனின் குடும்பத்தினர் நேரில் வந்து சந்திக்க, ரயில் டிக்கெட் எடுக்க 10 ஆயிரம் ரூபாய் வழங்கினால் உடனே திருமணம் குறித்து பேசி முடிவெடுத்துவிடலாம் என அவர் கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பி அவர்கள் பணம் கொடுத்த சில நிமிடங்களில் அந்த நபர் அங்கிருந்து மாயமாகி உள்ளார். அதே சமயம், சுங்கத்துறை அதிகாரியின் எண்ணும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் உடனடியாக போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் 2 செல்போன் எண்களுமே ஒரே நபரின் பெயரில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் புஜாரி (45) என்பது தெரியவந்தது. இவர் சமீப ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் 25 வயது இளைஞர் போன்ற தோற்றம் கொண்ட புகைப்படத்துடன் மேட்ரிமோனி தளத்தில் ஒரு ப்ரோபைலை உருவாக்கியுள்ளார். மாப்பிளை ரயில்வேயில் வேலை செய்கிறார், ஏர்போர்ட்டில் சுங்கத்துறையில் வேலை செய்கிறார் என வகை வகையாக பொய் பில்டப்புகளை வரனின் ப்ரோபைலில் பதிவிட்டு வைத்துள்ளார்.

அதை வைத்து திருமணத்திற்கு வர தேடும் பெண்களை குறிவைத்து பேசி அவர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். குறிப்பாக இவர் இளம் விதவைகள், விவாகரத்தான பெண்களை டார்கெட் வைத்து இவர் பேசி திருமண ஆசை காட்டி மோசடி செய்துள்ளார். இப்படி வரன்களை பேசி நம்பிக்கை வரவழைத்து அவர்களை நேரில் அழைத்து பொது இடங்களில் வைத்து சந்திப்பார். தான் வரனுக்கு மாமா என்று கூறி சம்பந்தம் பேசுவது போல் நடித்து பர்சை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன், டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய வேண்டும் என சாதாரணமான காரணங்களை கூறி ரூ.10,000, 20,000 போன்ற தொகைகளை வாங்கி பின்னர் எஸ்கேப் ஆகிவிடுவார்.

அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்றால் போன் சுவிட் ஆப் ஆகி இருக்கும். இப்படி சந்தேகமே வராத வகையில் நேக்காக இதுவரை நாடு முழுவதும் 259 பெண் குடும்பங்களை ஏமாற்றியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த 56 பேர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 பேர், டெல்லியைச் சேர்ந்த 32 பேர், கர்நாடகாவைச் சேர்ந்த 17, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 பேர், குஜராத்தைச் சேர்ந்த 11 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர், பீகாரைச் சேர்ந்த 5 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் என இவரது மோசடி வலையில் வீழ்ந்த பெண்களின் பட்டியல் இவ்வளவு நீளமாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *