விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும் : சத்யபிரதா சாகு..!
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. பாஜகவில் இ்ணைந்ததை தொடர்ந்து விஜயதாரணி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி ஜனவரி 24ம் தேதியில் இருந்து காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்ததால் தனது MLA பதவியை ராஜினாமா செய்து இருந்தார் விஜயதாரணி. இதன் காரணமாக விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியாகியுள்ளது.
இந்நிலையில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்த பின் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றார்