டிரைவர் ஷர்மிளா முன்ஜாமின் மனு டிஸ்மிஸ்..!
கடந்த 2 ஆம் தேதி சத்தி ரோட்டில் நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு காட்டூர் எஸ் ஐ ராஜேஸ்வரி மரியாதை குறைவாக பேசுவதாக கூறி வீடியோ வெளியிட்டார் கோவை வடவள்ளியை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ஷர்மிளா.
இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார்.
அதில்,‘‘நான் காந்தி புரம் டெக்ஸ்டூல் பாலத்தில் போக்கு வரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது வட வள்ளியை சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனது காரை போக்கு வரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்தார். இதனால் காரை அங்கிருந்து எடுக்கும் படி கூறினேன். ஆனால் அவர் காரை எடுக்காமல் என்னை வீடியோ எடுத்தார். இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன். இதையடுத்து, அவர் காரை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் நான் வாகன ஓட்டிகளை மரியாதை குறைவாக பேசியதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மையில் நான் அவரை திட்டவில்லை. என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், போலியான செய்தியை பரப்பி வீடியோ வெளியிட்ட ஷர்மிளா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இதுகுறித்து சைபர் கிரைமில் எஸ்ஐ அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன் ஜாமின் கோரி ஷர்மிளா தரப்பில், கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, சமூக ஊடகத்தில், லைக்ஸ் பெறுவதற்காக, வேண்டுமென்றே வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும், பெண் போலீசை மிரட்டி பணி செய்யவிடாமல் தடுத்ததால், அவருக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அரசு தரப்பில் வாதிட்டனர்.
விசாரித்த நீதிபதி விஜயா, டிரைவர் ஷர்மிளா, முன்ஜாமின் மனுவை ‘டிஸ்மிஸ்’ செய்து உத்தரவிட்டார்.