பிசிசிஐயின் சம்பள பட்டியலில் இருந்து விலகினால் இந்த சலுகைகள் கிடைக்காது!
Shreyas Iyer and Ishan Kishan BCCI contracts: 2023-24 சீசனுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தங்களைப் பெறும் வீரர்களின் பட்டியல் சமீபத்தியில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய பட்டியலில் பல இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பல வீரர்கள் அதிக சம்பளமும் பெற்றுள்ளனர். மேலும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால், முதன்முறையாக பல வீரர்கள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பழைய பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்த 7 வீரர்கள் இந்த புதிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு நட்சத்திர வீரர்கள் யார் என்றால் இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தான். இவர்கள் தற்போது பிசிசிஐ ஒப்பந்தத்தை தவறவிட்டுள்ள நிலையில் என்ன என்ன சலுகைகளை பெற முடியாது என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களுக்கு நான்கு பிரிவுகளின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது. A+, A, B மற்றும் C ஆகியவற்றின் கீழ் வீரர்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு போட்டி கட்டணம் மட்டுமின்றி கூடுதல் தொகையையும் பெறுவார்கள். இன்னிலையில், பிசிசிஐ-ன் வருடாந்திர சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இனி இந்திய அணிக்காக விளையாடினால் அந்த போட்டிக்கான சம்பளத்தை மட்டுமே பெற முடியும். அதை தவிர வேறு எந்த பணமும் வழங்கப்படமாட்டாது. மேலும், மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை (NCA) பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் போன்ற பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தம் இல்லாத வீரர்கள் அந்தந்த மாநில அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றால் மட்டுமே தேசிய கிரிக்கெட் அகாடமியை பயன்படுத்த முடியும். மேலும் மத்திய ஒப்பந்தத்தில் உள்ள இந்திய அணியின் வீரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளையும் நீக்கப்பட்ட வீரர்கள் இழக்க நேரிடும். இஷான் கிஷான் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ அதிகாரிகளின் பேட்சை கேட்காமல் ரஞ்சி டிராபி போட்டிகளை பலமுறை புறக்கணித்து வந்தனர். இஷான் கிஷன் ரஞ்சி டிராபிக்காக ஜார்கண்ட் அணிக்கு விளையாடாமல், ஹர்திக் பாண்டியாவுடன் பரோடாவில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இதனால் தேர்வாளர்கள் அவர் மீது கோபத்தில் இருந்தனர்.
மறுபுறம், ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி காலிறுதி போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும், அவருக்கு எந்த ஒரு காயமும் இல்லை என்று தேசிய கிரிக்கெட் அகாடமி கூறியது. ஐயரும் வரவிருக்கும் ஐபிஎல் போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வருவதாக தகவல் வெளியானது. இதனால் இவர் மீதும் பிசிசிஐ கோபத்தில் இருந்தது. இதன் விளைவாக இருவரும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.