SSY: சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் அதிக வட்டி பெறுவது எப்படி?
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். தமிழகத்தில் இந்த திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம் என அழைக்கப்படுகிறது.
பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் பிற செலவுகளுக்காக ஒரு நிதியை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு சேமிப்புக்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது தான் இந்த திட்டம்.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம்: சுகன்யா சம்ரிதி யோஜனாவில் 10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி சேமிக்க முடியும். தபால் நிலையம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகளில் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை தொடங்க முடியும்.
யாருடைய பெயரில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒரு நிதியாண்டில் இதில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1. 50 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம். இந்த திட்டத்தில் தற்போது 8.2 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது. அவ்வப்போது அரசாங்கத்தால் வட்டி விகிதங்கள் மாற்றப்படுகின்றன.
வருடாந்திர கூட்டு அடிப்படையில் கணக்கிட்டு வட்டித் தொகையானது வரவு வைக்கப்படுகிறது. குழந்தைக்கு 15 வயது எட்டு வரை இதில் முதலீடு செய்யலாம். அதன் பின்னர், அந்த பெண் குழந்தை 18 வயது எட்டியதும் 50 விழுக்காடு தொகையை எடுத்துக் கொள்ள முடியும். கணக்குத் துவங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு மொத்த தொகையும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரே வட்டி முறை கணக்கீடா?: இந்த திட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகம் தாங்கள் திட்டத்தை தொடங்கும் போது வழங்கக்கூடிய வட்டி முதிர்வு காலம் வரை தொடர்ந்து கிடைக்குமா என்பது தான். உதாரணமாக தற்போது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 8.2 விழுக்காடு வட்டி வழங்கப்படுகிறது .
ஒருவர் இந்த மாதம் சுகன்யா சம்ரிதி யோஜனாவில் சேமிக்க தொடங்குகிறார் என்றால் தற்போது தொடங்கி முதிர்வு காலம் வரை இதே வட்டி கிடைக்காது.
ஒவ்வொரு காலாண்டுக்கும் மாறும் வட்டி: ஒவ்வொரு காலண்டிற்கும் வட்டி தொகையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வருகிறது. எனவே சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதிர்வு காலம் வரை ஒரே முறையான வட்டி கணக்கீடு செய்யப்படாது. தற்போதுள்ள 8.2% வட்டி மார்ச் இறுதிவரை கணக்கீடு செய்யப்படும்.
அடுத்த காலாண்டில் அரசு வட்டியை உயர்த்தினால் அந்த காலாண்டு முடியும் வரை அந்த விகிதத்தில் கணக்கு வைக்கப்படும். அடுத்தடுத்த காலாண்டுக்கு அரசு அறிவிப்பதற்கு ஏற்ப வட்டி கணக்கீடு மாறும்.
அதிக வட்டி பெறுவது எப்படி?: ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதற்கு அப்போது நடைமுறையில் உள்ள வட்டி விகித அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் மொத்த வட்டியும் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வட்டி மற்றும் முதலீடு கூட்டப்பட்டு அடுத்த ஆண்டில் முதலீடாக எடுத்துக் கொண்டு வட்டி கணக்கிடப்படும். இந்த கூட்டு வட்டி முறை தான் சுகன்யா சம்ரிதி திட்டம் லாபகரமாக இருக்க காரணம். இந்த திட்டத்தில் அதிகபட்ச லாபத்தை பெற நிதியாண்டின் முதல் மாதத்திலேயே இயன்ற அளவு அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.