ஆப்பிரிக்க நாடொன்றில் நாடாளுமன்ற அமர்வின்போது துண்டிக்கப்பட்ட மின்சாரம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் நாடாளுமன்றத்திற்கான மின் விநியோகத்தை அந்நாட்டு மின்சார நிறுவனம் துண்டித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கானா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நானா அகுஃபோ–அட்டோ நாட்டு மக்களுக்கு உரையாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செலுத்தப்படாத கட்டணம்
மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என நினைத்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த நிலையில், மின்சாரத்தடை நீடித்ததுள்ளது.
சில நிமிடங்கள் கடந்ததும், உறுப்பினர்கள் அமர்ந்திருந்த சபைக்கு மட்டும் மின்பிறப்பாக்கி உதவியுடன் மின்சாரம் கிடைத்தது. ஆனால், மின்சார சேவை நாடாளுமன்றத்தின் பிற பகுதிகளுக்கு வரவில்லை.
இதனால் மின் தூக்கியில் சென்ற பல உறுப்பினர்கள் அதிலேயே சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றன. நாடாளுமன்ற அலுவலகம் செலுத்த வேண்டிய மின் கட்டண மிகுதியை வசூலிக்க பல முறை அறிவித்தல் விடுத்தும் கட்டணத்தை செலுத்தாததால், மின் விநியோகத்தை துண்டித்ததாக அந்நாட்டு மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் வில்லியம் போடெங் தெரிவித்துள்ளார்.
மின் தடை என்பது கட்டணம் செலுத்தாத அனைவருக்கும் தான். கட்டணம் செலுத்தாதவர்கள் யாராக இருந்தாலும் மின்சார விநியோகம் துண்டிக்கப்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்திய பிறகே நாடாளுமன்றத்திற்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.