மக்களுக்கு அடுத்த ஷாக்..! இன்று முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்கிறது..!

ஆவின் நிறுவனம் ஐஸ்கிரீம்களின் விலையை ரூபாய் 2 முதல் ரூபாய் 5 வரை திடீரென உயர்த்த்தியுள்ளது.

அதன்படி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாக்கோபாரின் (Chocobar) விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோல் 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெண்ணிலா Ball ஐஸ்க்ரீம் 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 100 கிளாசிக் கோன் வெண்ணிலா ஐஸ்க்ரீம் 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் கோன் சாக்கோலேட் ஐஸ்க்ரீமும் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் ஐஸ்க்ரீம்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் இன்று (03.03.2024) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது என்றும் பொன்னுசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இது போன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பால்வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்தி விட்டு களத்தில் இறங்கி ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என்றும் பொன்னுசாமி எச்சரித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *