இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! சரசரவென குறைந்த பூண்டு விலை..!
தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் பூண்டு அதிகம் விளைகிறது. பூண்டில் தரைப்பூண்டு, மலைப்பூண்டு, சீனா பூண்டு என மூன்று வகையாக தமிழ்நாடு மார்க்கெட்டில் கிடைக்கிறது.
இதில் சீனா ரகம் சற்று பெரிதாகவும் உரிக்க எளிதாகவும் இருக்கும். இந்த பூண்டில் வாசனை, காட்டம் ரசம் (எஸன்ஸ்) போன்றவை குறைவுவாகவே இருக்கும். தரைப்பூண்டு காட்டம் அதிகமாக இருந்தாலும், பெரிய சைஸ் அரிதாகவும் கிடைக்கும். அதேநேரம் மலைப்பூண்டு புகைப்போட்டு பாடம் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு வருவதோடு, மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. வாசனை, ரசம், காட்டம் என அனைத்தும் சூப்பராக இருக்கும்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலும் மலைப் பூண்டு அதிகமாக விளைகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதேபோல் கொடைக்கானல் பூண்டு அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவை ஆகும். கொடைக்கானல் பூண்டுக்கு தமிழகம் முழுவதுமே பெரிய வரவேற்பு உள்ளது.
தமிழ்நாட்டில் விளையும் பூண்டு மாநிலத்தின் தேவைக்கு போதாது. இதன் காரணமாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழ்நாட்டில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி குறைந்ததால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.600 வரை விற்பனையாகி வந்தது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் 300 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று மேலும் 150 ரூபாய் குறைந்து, ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. 600 ரூபாயிலிருந்து 20 நாட்களுக்குள் 150 ரூபாய்க்கு விலை குறைந்து உள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.