ஜாபர் சாதிக் வங்கி கணக்குகள் முடக்கம்..!
டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் அடங்கிய தனிப்படை, மேற்கு டெல்லியில் உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் இருந்து செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜிபுர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ போதையூட்டும் வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், சலீம் என தகவல் வெளியானது. வழக்கில் தொடர்புடையதாக மேலும் சிலரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த சம்மனை சென்னை மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர்.
மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம், வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாபர் சாதிக் தொடர்புடைய எட்டு வங்கிக் கணக்குகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.