RIP Captain Vijayakanth: கேப்டன்.. கேப்டன் என ஆர்ப்பரித்த மக்கள் – தொடங்கிய விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்

தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல், இன்று தீவுத்திடலில் வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கிய அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது உடலுக்கு பொதுமக்கள் வழிநெடுக நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அன்று உடல் நிலைக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் நேற்று காலை 6.10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4.45 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

நேற்று தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல், இன்று காலையில் சென்னை தீவுத்திடலுக்குக் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்காக தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நண்பகல் 2:45 மணியளவில் தொடங்கியது.

இறுதி ஊர்வல வாகனத்தில் விஜயகாந்தின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழிநெடுக கேப்டன் கேப்டன் என அவரது ரசிகர்களும் தொண்டர்களும் வழிநெடுக ஆர்ப்பரித்தது காண்போரை கலங்கச் செய்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *