நல்ல சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.24,000 வரை ஆஃபர்.. சூப்பர் டிஸ்கவுண்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மின்சார இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான பவுன்ஸ் இன்ஃபினிட்டி, தங்களின் பிரபல E1+ ஸ்கூட்டர் வகைகளின் விலையை 21 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இந்த புதிய விலை உடனடியாக அமலுக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, E1+ ரக ஸ்கூட்டர்களின் விலை ரூ.24,000 வரை குறையும். அந்தவகையில், பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1+ ஸ்கூட்டரை பயனர்கள் ரூ.1.13 லட்சம் என்ற விலைக்கு பதிலாக, ரூ.89,999 மட்டுமே செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இது எக்ஷ்-ஷோரூம் விலை என்பதை மறந்து விட வேண்டாம். மேலும், மார்ச் 31, 2024 வரை மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ1+ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை வெளியே எடுத்து சார்ஜ் செய்யலாம். இதை சார்ஜ் செய்ய சாதாரண 15 Amp பிளக் போதுமானது. இதில் மேலும் ஒரு புதுமை என்னவென்றால், இதில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி லிக்விட் கூல்டு முறையில் குளிர்விக்கப்படுகிறது. எனவே, அனைத்து கால நிலைகளிலும் நீடித்து உழைக்கும் பேட்டரியாக இவை இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிவேக சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2.2 கிலோவாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் உச்ச வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர் ஆக இருக்கும். நீண்ட தூர பயணத்திற்காக கையில் எடுத்து மாற்றக்கூடிய 2 kWh திறன்கொண்ட NMC செல்களால் செறிவூட்டப்பட்ட லித்தியம் ஐயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் 156 தர மதிப்பீட்டின் படி இந்த பேட்டரி கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுவதுமாகச் சார்ஜ் செய்தால், 85 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
பவுன்ஸ் இன்ஃபினிட்டி ஸ்கூட்டரின் விலைக் குறைப்பு தொடர்பாகப் பேசிய நிறுவனத்தின் சிஓஓ மற்றும் இணை நிறுவனரான ஜி.அனில், “இந்த குறிப்பிடத்தக்க விலைக் குறைப்பை நுகர்வோருக்காக வழங்கியுள்ளோம். அவர்களின் தேவைகளை எளிதாக எட்டிப்பிடிக்க இது உதவும். மலிவு, செயல்திறன், போன்றவற்றை எதிர்பார்த்திருக்கும் நுகர்வோரின் தேவையை நாங்கள் நிவர்த்தி செய்வதற்கான அர்ப்பணிப்பை இந்த சலுகைகள் பிரதிபலிக்கிறது. எங்கள் ஸ்கூட்டர்கள் பயன்படுத்த எளிதானவை,. சார்ஜ் செய்வதும் மிகவும் சுலபம். இதனுடன் நீட்டிக்கப்பட்ட வரம்பு மற்றும் ஸ்மார்ட் கனெக்டிவிட்டிக்கான போர்ட்டபிள் பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் போன்ற அம்சங்களை வழங்குகிறோம்.
இவை அனைத்தும் மின்சார இருசக்கர வாகன சந்தையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்று நம்புகிறோம். இது சேமிப்பைக் குறித்தது மட்டுமல்ல; பசுமைப் புரட்சி வாயிலாக எதிர்காலத்தை சிறப்பாக அனுபவிக்க அனைவருக்கும் அதிகாரம் அளிப்பதாகும்” என்று தெரிவித்தார்.