ஐபிஎல் 2024 புரோமோ வீடியோ வெளியீடு – மாறுபட்ட வேடங்களில் நடித்த ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐயின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சீசன் நடத்தப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது.
இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், தான் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ள ஐபிஎல் தொடரின் புரோமோ வீடியோ வெளியானது.
https://twitter.com/StarSportsIndia/status/1764145522741293381
இந்த வீடியோவில் ரிஷப் பண்ட் சிங் போன்றும், ஹர்திக் பாண்டியா பிஸினஸ் மேன் போன்றும், ஷ்ரேயாஸ் ஐயர் வயதான தோற்றத்திலும், கேஎல் ராகுல் படித்துக் கொண்டிருப்பது போன்றும் வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், முதல் காட்சியிலேயே கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வெற்றிக்கு வித்திட்ட ரவீந்திர ஜடேஜாவை எம்.எஸ்.தோனி அலேக்காக தனது தோளில் தூக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. அதை பார்த்து ரிஷப் பண்ட் கண்ணீர்விடுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.