இது சரியா படலை.. விலகிய ஸ்டெய்ன்.. காலி செய்த டேனியல் வெட்டோரி.. SRHல் அதிகரிக்கும் சர்ச்சை!

ஐதராபாத் அணி நிர்வாகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியால் நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

ஐபிஎல் ஏலம் முடிவடைந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், “ஆஸ்திரேலியா பயிற்சியாளர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஆஸ்திரேலியா வீரரையாவது தங்கள் அணியில் வாங்குகிறார்களே.. அது எப்படி” என்று கிண்டல் செய்தார். அப்படி ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் டேனியல் வெட்டோரி, தற்போது ஐதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வருகைக்கு பின் நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.20.50 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ரூ.6.8 கோடிக்கு வாங்கப்பட்டார். இதனால் ஐதராபாத் அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்றே கணிக்க முடியவில்லை. ஏனென்றால் கிளாஸன், எய்டன் மார்க்ரம், மார்கோ யான்சன், ஹசரங்கா, ஃபரூக்கி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இருக்கின்றனர்.

இதனால் டிராவிஸ் ஹெட் மற்றும் கம்மின்ஸை விளையாட வைக்க வேண்டுமென்றால் மார்க்ரம் மற்றும் மார்கோ யான்சன் தான் பெஞ்சில் உட்கார வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. எஸ்ஏ20 லீக்கில் தொடர்ச்சியாக இரு முறை கோப்பையை வென்றும் மார்க்ரம் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட உள்ளார்.

ஐதராபாத் அணி நிர்வாகத்தின் இந்த முடிவால் பவுலிங் பயிற்சியாளர் டேல் ஸ்டெய்ன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. மார்க்ரமை கேப்டன்சியில் இருந்து மாற்றியதை ஏற்காமல் ஸ்டெய்ன் விலகியதாகவும், அவருக்கு பதிலாக புதிய பவுலிங் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளின் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஜேம்ஸ் பிராங்க்ளின் மற்றும் டேனியல் வெட்டோரி இருவரும் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் மற்றும் ஹண்ட்ரட் லீக் தொடர்களில் ஒன்றாக பணியாற்றியவர்கள். தற்போது பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். பயிற்சியாளர் டேனியல் வெட்டோரியின் அதிரடி முடிவுகளால் ஐதராபாத் அணிக்குள் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *