சிஎஸ்கே மட்டுமல்ல.. ராஜஸ்தான் அணியும் தொடங்கிட்டாங்க.. பிரம்மாண்ட கட் அவுட் முன் சஞ்சு சாம்சன்!
ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் அணி தரப்பில் தொடங்கப்பட்டுள்ள பயிற்சி முகாமில் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது சாதனை படைத்தது. அதன்பின் 14 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே சாதனையாக பார்க்கப்பட்டு வந்த ராஜஸ்தான் அணி, கடந்த 2 சீசன்களாக அனைத்து அணிகளுக்கும் பீதியை கொடுத்து வருகிறது.
இதற்கு அந்த அணி தரப்பில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் அகாடமிகளும், இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வரும் பயிற்சியும் தான். இதற்காகவே ராஜஸ்தான் அணி நிர்வாகம் பிரத்யேக உள்விளையாட்டு அரங்குகள் மற்றும் மைதானங்களை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமை ராஜஸ்தான் அணி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இந்த பயிற்சி முகாமில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர்கள் பலரும் பங்கேற்க, இன்று அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளார். பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ள சஞ்சு சாம்சனின் கட் அவுட் முன் நின்று சஞ்சு சாம்சன் ஆடிய ஷாட்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சஹால், பட்லர் உள்ளிட்டோர் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல் உள்ளூர் கிரிக்கெட்டில் ரியான் பராக் அபார ஃபார்மில் இருக்கும் சூழலில், அவரின் பயிற்சியில் இணைந்துள்ளார்.
நட்சத்திர வீரர்கள் ஏராளமானோர் இருக்கும் ராஜஸ்தான் அணி இம்முறை பல்வேறு அணிகளுக்கும் ஆச்சரியம் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது. முதல் அணியாக சிஎஸ்கே அணி பயிற்சி முகாமை தொடங்கிய நிலையில், ராஜஸ்தான் அணியின் மார்ச் 1 முதலே பயிற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.