குணா குகைக்கு பின்னாடி இத்தனை கதைகள் இருக்கா? ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தால் மீண்டும் கிளம்பிய எதிர்பார்ப்பு!

மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தை தொடர்ந்து, கொடைக்கானலில் பிரபல சுற்றுலா தலமான குணா குகை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் மிகவும் முக்கியமான சுற்றுலாத் தலம் என்றால், அது குணா குகைதான்.

நடிகர் கமல் நடித்து 1991ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்திற்கு பிறகே, குணா குகை என்றழைக்கப்படும் இந்த இடத்திற்கு முந்தைய காலப் பெயர் பேய்களின் சமையலறை.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கியுள்ளது கொடைக்கானல்.

1821ஆம் ஆண்டில் குணா குகை பகுதியில் யாரோ சமைப்பது போன்ற சத்தத்தை கேட்டு, அப்பகுதிக்கு சென்று தேடி பார்த்த பி.எஸ்.வார்டு என்ற அமெரிக்கர், அப்பகுதியில் அப்படி யாரும் இல்லை என்பதையும் உறுதி செய்தார். அதன்பிறகு, அங்குள்ள குகைகளை ஆய்வு செய்ய சென்றவர்கள் பலரும் மர்மமான முறையில் மாயமானதால், அந்த இடத்திற்கு பேய்களின் சமையலறை என பெயர் வைத்தார்கள் ஆங்கிலேயர்கள்.

அதன்பிறகு பலரும் இந்த குகை பகுதியில் விழுந்து மாயமானாலும், அது பெரிய அளவிற்கு பேசப்படவில்லை என்பதே உண்மை.ஆனால், 1991ஆம் ஆண்டு வெளியான கமல் நடித்த குணா திரைப்படம் இந்த குகை பகுதியில்தான் படமாக்கப்பட்டது.

கொடைக்கானலில் அதுவரை படப்பிடிப்பே நடக்காத இடத்தில், படப்பிடிப்பை நடத்த வேண்டும் என கமல் உள்ளிட்டோர் தேடியபோது கிடைத்ததுதான் இந்த குகை பகுதி.

அந்த திரைப்படத்தின் இயக்குநர் சந்தான பாரதியுடன் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று இந்த பகுதியை கண்டறிந்த கமல், மலை உச்சியில் தேவாலயம் போன்று ஒரு செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தினார். சுமார் 700 அடி பள்ளத்தாக்கில் கயிறு கட்டி இறங்கி கமல் படப்பிடிப்பை நடத்திய நிலையில், குணா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் இருள் சூழ்ந்த இந்த குகை வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த படம் வெளியானதும் பேய்களின் சமையலறை என்றழைக்கப்பட்ட குகை, அதன் பிறகு குணா குகை என்று அழைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு பிறகு மீண்டும் பிரபலமடைந்த குணா குகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்ததோடு, பலரும் இந்த குகைகளில் தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களில் ஒருவரின் உடல் கூட மீட்கப்படாத நிலையில், 1993ஆம் ஆண்டு குணா குகைக்குள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்தது வனத்துறை.

அதன்பிறகு கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள், இரும்பு கம்பி போடப்பட்டு தடுக்கப்பட்ட பகுதியை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு வந்த நிலையில், அவர்கள் உள்ளே சென்று பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறது மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம். இதையடுத்து, மீண்டும் குணா குகைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர் சுற்றுலாப் பயணிகள். குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில், குகைக்குள் பாதுகாப்புடன் சென்று சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். இதனிடையே, சுற்றுலாப் பயணிகள் உற்சாக மிகுதியில் சில நேரங்களில் எச்சரிக்கையை கண்டுகொள்வதில்லை என்பதால், குணா குகையை பொதுமக்களின் பார்வைக்கு திறக்க வாய்ப்பில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *