விஜயகாந்த் மறைவு: நடிகர் அஜித் இரங்கல்
நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை காலமானார். விஜயகாந்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டது.
தீவுத்திடலில் இருந்து மதியம் 2.30 மணியளவில் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அஜித் இரங்கல்
இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரேமலதா மற்றும் சுதீஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அஜித் இரங்கல் தெரிவித்தார். மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக துபாயில் இருப்பதால் நேரில் பங்கேற்க முடியவில்லை என்றும் நடிகர் அஜித் வேதனை தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் நடிகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் வந்து பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விஜயகாந்தை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு நடிகர் அஜித் தனது ஆழ்ந்த இரங்கலை மேலும் தெரிவித்துள்ளார்.