அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..!

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், மொத்தம் 10 நாட்களில் தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதன்படி, இன்று (மார்ச் 4-ம் தேதி) தொடங்கும் அவருடைய பயணத்தின் முதல் பகுதியாக, தெலுங்கானாவின் அடிலாபாத் நகருக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் பொது கூட்டமொன்றில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, தமிழகம் வரும் அவர், கல்பாக்கத்தில் உள்ள அணு சக்தி துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அரசு நிறுவனம் ஒன்றிற்கு நேரில் சென்று பார்வையிடுகிறார்.

சென்னையில் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஐதராபாத்துக்கு செல்கிறார். தெலுங்கானாவின் சங்காரெட்டியில், நாளை (5-ந்தேதி) பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டியும், திட்டங்களை தொடங்கி வைத்தும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து, சங்காரெட்டியில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார். இதன் தொடர்ச்சியாக, தெலுங்கானாவில் இருந்து ஒடிசா செல்லும் பிரதமர் மோடி, ஜஜ்பூர் நகரில், சண்டிகோல் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஒடிசாவில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு செல்கிறார்.

அவர் 6-ந்தேதி கொல்கத்தா நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பராசத் நகரில் பொது கூட்டம் ஒன்றில் உரையாற்ற இருக்கிறார். இதன்பின்பு, பீகாருக்கு சென்று பெட்டையா நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

வருகிற 7-ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சென்று ஸ்ரீநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு அன்று மாலை புதுடெல்லியில் நடைபெறும் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். டெல்லியில் மார்ச் 8-ந்தேதி தேசிய விருது உருவாக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அசாமுக்கு செல்கிறார்.

இதனை தொடர்ந்து, 9-ந்தேதி அருணாசல பிரதேசம் செல்லும் அவர், மேற்கு காமெங் பகுதியில் சீலா சுரங்க திட்டம் ஒன்றை தொடங்கி வைக்க உள்ளார். இட்டாநகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டுகிறார். பின்னர் அசாம் செல்லும் பிரதமர் மோடி ஜோர்ஹத் நகரில் லசித் பர்புகான் சிலையை திறந்து வைக்க உள்ளார்.

தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டியும், திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் செய்கிறார். மேற்கு வங்காளம் செல்லும் அவர், சிலிகுரி நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். இதன்பின்னர், பொது கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளார்.

உத்தர பிரதேசத்திற்கு வரும் 10-ந்தேதி செல்லும் பிரதமர் மோடி, அசாம்கார் பகுதியில் நகரில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதன்பின்னர், 11-ந்தேதி நமோ டிரோன் தீதி மற்றும் லக்பதி தீதி நிகழச்சிகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து அவர் அரியானா பிரிவுக்கான துவாரகா விரைவு சாலையை தொடங்கி வைக்கிறார்.

அன்று மாலை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். குஜராத்தின் சபர்மதி நகருக்கு 12-ந்தேதி செல்லும் அவர், பின்னர் ராஜஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டு, ஜெய்சல்மர் மாவட்டத்தின் பொக்ரான் நகரில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதனை தொடர்ந்து, 13-ந்தேதி குஜராத் மற்றும் அசாமில் 3 அரை மின்கடத்தி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி காட்சி வழியே பங்கேற்க இருக்கிறார். பின்பு, சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *