இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 9.64 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: ராகுல் காந்தி!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்கு இடையே, தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. அதேசமயம், அரசியல் கட்சித் தலைவர்கள் ஏராளமான தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் பிரசாரத்தின்போது வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு, விவசாயிகளுக்கு (சட்டரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட) குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அளித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 9.64 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது எனவும், நாட்டில் வேலையின்மை விகிதம் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை விட இரட்டிப்பாக உள்ளது எனவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின் மூடிய கதவுகளைத் திறப்போம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாட்டு இளைஞர்களே, ஒன்றைக் கவனியுங்கள். நரேந்திர மோடியின் எண்ணம் வேலைவாய்ப்பு தருவது அல்ல. புதிய பதவிகளை உருவாக்காமல் இருப்பதோடு காலியாக உள்ள மத்திய அரசின் பதவிகளையும் நிரப்பாமல் இருக்கிறார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகளைக் கருத்தில் கொண்டால், 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

முக்கியமான துறைகளை மட்டும் பார்த்தால், ரயில்வேயில் 2.93 லட்சமும், உள்துறை அமைச்சகத்தில் 1.43 லட்சமும், பாதுகாப்பு அமைச்சகத்தில் 2.64 லட்சமும் காலியாக உள்ளன. 15 முக்கிய துறைகளில் 30%க்கும் அதிகமான பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன என்பதற்கு மத்திய அரசிடம் பதில் உள்ளதா?

‘பொய் உத்தரவாதப் பையை’ சுமந்து வரும் பிரதமரின் சொந்த அலுவலகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மிக முக்கியமான பதவிகள் காலியாக இருப்பது ஏன்? நிரந்தர வேலை கொடுப்பதை சுமையாகக் கருதும் பாஜக அரசு, பாதுகாப்பும் மரியாதையும் இல்லாத ஒப்பந்த முறையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.

காலி பணியிடங்கள் நாட்டின் இளைஞர்களின் உரிமை, அவற்றை நிரப்ப உறுதியான திட்டத்தை தயாரித்துள்ளோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின் மூடிய கதவுகளைத் திறப்போம் என்பதே இந்திய கூட்டணியின் உறுதி. வேலையில்லா திண்டாட்டத்தின் இருளை உடைத்து இளைஞர்களின் தலைவிதி உயரப் போகிறது.” என பதிவிட்டுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *