முகேஷ் அம்பானி சம்மந்திகளில் யாருடைய சொத்து மதிப்பு அதிகம்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வு குஜராத்தில் நடைபெற்றது.
பல நூறு கோடி செலவில் மார்ச் 1 முதல் 3ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த மூன்று நாட்கள் நிகழ்ச்சி தான் இந்தியாவில் பேசு பொருளாக இருக்கிறது. அம்பானிக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அமைந்த சம்மந்தங்கள் எப்படி? அவர்களின் செல்வாக்கு என்ன? என்பதை பார்க்கலாம்..
பிராமல், மேத்தா, மெர்சண்ட் ஆகிய மூன்று பணக்கார குடும்பங்கள் அம்பானி குடும்பத்தில் சம்மந்தம் செய்துள்ளன. அதில் பிராமல் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு தான் அதிகம்.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் ஒரே மகளான ஈஷா அம்பானிக்கு அஜய் பிராமல் மற்றும் ஸ்வாதி பிராமல் ஆகியோரின் மகன் ஆனந்த் பிராமலுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மருந்து, நிதி சேவை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் கோலோச்சி வரும் பிராமல் குழுமத்தின் தலைவர் தான் அஜய் பிராம்ல் . ஃபோர்ப்ஸின் அறிக்கையின் படி, அஜய் பிராமலின் சொத்து மதிப்பு 34,898 கோடி ரூபாயாகும்.
அடுத்ததாக மேத்தா குடும்பத்தை பற்றி பார்க்கலாம். முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ரஸல் மேத்தா மற்றும் மோனா மேத்தா தம்பதியினரின் மகளான ஸ்லோக மேத்தாவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ரஸல் மேத்தா வைரம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள் என பல துறைகளில் தொழில் செய்து வரும் ரோஸி ப்ளூ இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஆவார். ரஸல் மேத்தாவின் சொத்து மதிப்பு 1,844 கோடி ரூபாய் ஆகும்.
அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு மெர்ச்சண்ட் குடும்பத்தில் இருந்து பெண் எடுக்கப்பட்டுள்ளது. வீரேன் மெர்ச்சண்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்டின் மகளான ராதிகா மெர்ச்சண்ட்டை அவர் திருமணம் செய்கிறார்.
விரேன் மெர்ச்சண்ட் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இது ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனமாகும். விரேன் மெர்ச்சண்டின் சொத்து மதிப்பு 755 கோடி ரூபாயாகும்.
சம்மந்திகளோடு ஒப்பிட்டு பார்த்தால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்காக உள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 9.4 லட்சம் கோடி ரூபாய் ஆகும். உலகளவில் பெரும் பணக்காரர்களில் 11ஆவது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் இருக்கிறார் முகேஷ் அம்பானி.