இரண்டாக உடையும் டாடா மோட்டார்ஸ்! பங்குச்சந்தைக்கு வந்த முக்கிய கடிதம்.. சந்திரசேகரன் மாஸ்டர் மைண்ட்!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமும், எலக்ட்ரிக் வாகன சந்தையில் சுமார் 80 சதவீத பங்கீட்டைக் கொண்ட டாடா மோட்டார்ஸ் லிமிடெட் மார்ச் 4ஆம் தேதி பங்குச் சந்தைக்கு ஒரு முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்தது.
இந்த அறிக்கையில் டாடா மோட்டார்ஸ் தனது வணிகத்தை இரண்டு தனிப்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களாகப் பிரிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் வணிக வாகனங்கள் (CV) மற்றும் பயணிகள் வாகனங்கள் (PV) பிரிவுகளாக இருக்கும் என அறிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கடந்த 3 வருடமாக இந்த ஒரு முக்கியமான தருணத்திற்காகத் தான் காத்துக்கொண்டு இருந்தது. டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை மீண்டும் நம்பர் 1 ஆட்டோமொபைல் நிறுவனமாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்தது.
இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஐசி கார்கள், எலக்ட்ரிக் கார்கள், வர்த்தக வாகனங்கள் அதாவது டிரக், சரக்கு வாகனம் ஆகிய கனரக வாகனங்களுக்கு என தனித்தனி பிரிவை உருவாக்கி 3 பிரிவுகளாக அதன் சொத்துக்கள், வர்த்தகம், ஆதாரங்கள் என அனைத்தையும் பிரித்தது நிர்வாகம் செய்து வருகிறது.
கடந்த வருடம் பயணிகள் வாகன பிரிவில், எலக்ட்ரிக் வாகன பிரிவில் தனிப்பட்ட முறையில் முதலீட்டையும் திரட்டியது யாராலும் மறக்க முடியாது. ஜியோ பைனான்சியல் டீமெர்ஜெர் வெற்றியைத் தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் இரண்டாக உடைகிறது, இது வெற்றி அடைந்தால் அடுத்த 10 வருடத்தில் எலக்ட்ரிக் வாகன பிரிவு கூட தனியாகப் பிரிக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் செய்யப்பட்ட பயணிகள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்கள் துணை நிறுவனமாகப் பிரிக்கப்பட்டதன் வளர்ச்சி தான் இந்த Demerger.
டாடா மோட்டார்ஸ் இரண்டாகப் பிரிக்கப்படுவதன் மூலம் லாபத்தை அதிகரிப்பதற்கும், வேகமாகச் செயல்படுவதற்கும், நிதிநிலையை மேம்படுத்துவதற்கும் தனித்தனி வியூகங்களை வகுத்துத் தனிப்பட்ட முறையில் வணிகங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பை உருவாக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் (PV + EV), மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஆகிய பிரிவுகள் தனித்தனி வளர்ச்சி உத்திகளைச் செயல்படுத்தி வருகின்றன. 2021ஆம் ஆண்டு முதல், இந்த வணிகங்கள் தனித்தனி தலைமை செயல் அதிகாரிகளின் கீழ் சுதந்திரமாக இயங்கி வருகின்றன, என்று டாடா மோட்டார்ஸ் கூறியுள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை 989 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. டாடா மோட்டார்ஸ்-ன் இந்த டிமெர்ஜர் தேசிய நிறுவன மீளமைப்பு சட்ட திட்டத்தின் (NCLT) ஒப்புதல் அளிப்பதன் மூலம் செயல்படுத்தப்படும்.
டாடா மோட்டார்ஸ் பங்குதாரர்கள் இரு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிலும் ஒரே அளவிலான பங்குச் சொந்தம் கொண்டிருப்பார்கள் என்று கார் தயாரிப்பு நிறுவனம் பங்குச் சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளது. அதாவது 100 டாடா மோட்டார்ஸ் பங்குகள் தற்போது வைத்திருந்தால், Demerger-க்கு பின்பு இரு நிறுவனத்திலும் தலா 100, 100 பங்குகள் வைத்திருப்பார்கள். மேலும் இந்த டிமெர்ஜர் நடைமுறைப்படுத்த 12 முதல் 15 மாதங்கள் வரை ஆகலாம் என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.