விஜயகாந்துக்கு செய்வினை! ஆளை முடக்கி பேச்சு வராமல் போக என்ன காரணம்? பகீர் கிளப்பும் கங்கை அமரன்!
அடுத்த முதலமைச்சர் எனச் சொல்லும் அளவுக்கு அரசியலில் விறுவிறுவென வளர்ந்து வந்த விஜயகாந்துக்கு பேச்சு வராமல் போனதற்கும், கை, கால்கள் செயலிழந்து முடங்கியதற்கும் செய்வினை தான் காரணம் போல் தெரிவதாக இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் பகீர் கிளப்பியுள்ளார்.
விஜயகாந்துக்கு அமெரிக்கா உட்பட உலகின் தலைசிறந்த அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டும் அவர் பழைய தெம்புடன் குணம் அடையாமல் போனது ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ஆன்மிகத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஏற்பட்ட பிரச்சனைக்ளை சரி செய்திருக்கலாமோ எனத் தோன்றுவதாகவும் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்கிறார் கங்கை அமரன். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி மூலம் விஜயகாந்த் மரணம் பற்றி பேசிய போது அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
விஜயகாந்துக்கு இறக்கும் வயதே அல்ல என்றும் இன்னும் எவ்வளவோ காலம் இருந்திருக்க வேண்டியவர் இப்படி இறந்துவிட்டார் என்பதை நினைக்கும் போது அதை மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது எனவும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் கங்கை அமரன். தானும், தனது அண்ணன் இளையராஜாவும் தான் விஜயகாந்த் திரைப்படங்களுக்கு மிக அதிகமாக இசை அமைத்துக் கொடுத்திருப்பதாகவும் கூறிய அவர் விஜயகாந்தை வைத்து தாம் 2 படங்கள் இயக்கியுள்ளதாகவும் கூறினார்.
கடந்த சில வருடங்களாக விஜயகாந்தை தன்னால் பார்க்கமுடியவில்லை என்றும் பார்த்திருந்தால் ஆன்மிகவாதிகள் மூலம் உடல்நலத்தை சரி செய்ய அறிவுறுத்தியிருப்பேன் எனவும் தெரிவித்தார். விஜயகாந்துக்கு யாரால் கை கால்கள் முடக்கப்பட்டது, யாரால் பேச்சு வராமல் போனது என்பதை யோசித்தால் உலகில் இப்படியுமா நடக்கும் என எண்ணத் தோன்றுவதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
விஜயகாந்தை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. நரம்பியல் பிரச்சனையோடு சர்க்கரை வியாதியும் சேர்ந்துக்கொண்டதால் தான் விஜயகாந்தின் உடல் எடை குறைந்ததற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.