IPL 2024 : குண்டைத் தூக்கிப் போட்ட தோனி.. சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன்? அந்த 2 வீரர்கள் யார்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகப் போவதாகவும், போட்டிகளில் ஆடினாலும், அணியில் கேப்டனாக இல்லாமல் ஒரு ஆலோசகராக செயல்படப் போவதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. தோனி புதிய பொறுப்பை ஏற்கப் போவதாக சூசகமாக வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவை அடுத்தே ரசிகர்கள் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக கணித்துள்ளனர்.
தோனி கடந்த 2008இல் சிஎஸ்கே அணி உருவானது முதல் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இடையே 2022இல் சில போட்டிகளில் மட்டும் ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக்க நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின் அவரே கேப்டன் பணியை தொடர்ந்து வருகிறார்.
2024 ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்படும் நிலையில் திடீரென தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 2024 ஐபிஎல் தொடர் குறித்து ஒரு பதிவை வெளியிட்டார் தோனி. அதில் “புதிய தொடர், புதிய பொறுப்பு” என குறிப்பிட்டு இருந்தார். அதை வைத்து 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படப் போவதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினால் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதிலாக சிஎஸ்கே ரசிகர்கள் தேர்வு செய்துள்ள இருவர் ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்.
இதில் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே 2022 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு பின் பதவியில் இருந்து விலகி இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் தான் அடுத்த கேப்டனாக வருவார் என சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு போன்ற முன்னாள் சிஎஸ்கே வீரர்களே கூறி இருக்கின்றனர்.
எப்படியும் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவி வெளிநாட்டு வீரர்களுக்கு செல்லாது. இந்திய வீரர்களில் தோனிக்கு பின் பெரிய வீரர் என்றால் அது ஜடேஜா தான். ஆனால், அவருக்கும் 35 வயதாகும் நிலையில் அவரை கேப்டனாக ஆக்கினால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே கேப்டனாக செயல்பட முடியும். அதே சமயம் 27 வயதாகும் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்கும் பட்சத்தில் அவர் நீண்ட காலம் கேப்டனாக செயல்பட முடியும்.