சஞ்சு சாம்சன் நல்லா தமிழ் பேசுவார்.. அவர் எனக்கு தம்பி மாதிரி.. அஸ்வின் நெகிழ்ச்சி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் சஞ்சு சாம்சன் செய்யும் சேட்டைகள் குறித்து அவர் பேசியிருக்கிறார்.
இதனை தற்போது பார்க்கலாம். களத்திற்கு வெளியே சஞ்சு சாம்சன் சரியான லொள்ளு பிடித்த வீரர். இது நிறைய ரசிகர்களுக்கு நிச்சயம் புரியாது. ஏனென்றால் வீரர்கள் களத்தில் சீரியஸாக இருப்பதை பார்த்துக் கொண்டு அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்பார் என்று பலரும் நினைப்பார்கள்.
ஆனால் சில வீரர்கள் அப்படி கிடையாது. இரண்டுமே இரண்டு கேரக்டராக இருப்பார்கள். அப்படித்தான் சஞ்சு சாம்சனும் இருப்பார். சஞ்சு சம்சனுக்கு பல மொழிகள் தெரியும். அவர் ஹிந்தி, மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் பேசுவார். நாங்கள் இருவரும் தமிழில் தான் அடிக்கடி பேசிக் கொள்வோம்.
நான் தமிழ் சினிமா தான் அதிகம் விரும்பி பார்ப்பேன். அவரும் தமிழ் படம் பார்ப்பதால் நாங்கள் அடிக்கடி தமிழ் காமெடி வசனங்களை பேசி சிரித்து கொள்வோம். சில மக்களுக்கு தமிழ் பேச தெரியும். ஆனால் அவர்களுக்கு சென்னை சொந்த ஊராக இருக்காது. மேலும் தமிழ்நாட்டில் அவர்கள் பிறந்து வளர்ந்து இருக்க மாட்டார்கள்.
இதன் காரணமாக தமிழ் சினிமாவில் என்ன காமெடி வசனங்கள் வருகிறது. உள்ளூர் காமெடி என்ன இருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியாது. ஆனால் சஞ்சு சாம்சன் தமிழ் படங்களை விரும்பி பார்ப்பார். இதனால் எங்கள் இருவருக்கும் நேரடியாகவே ஒரு நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது. நாங்கள் பல காமெடி படங்களை பார்த்து அந்த காமெடிகள் குறித்து பேசி சிரித்து கொள்வோம்.
நானும் சஞ்சு சாம்சனும் களத்திற்கு வெளியே சென்று விட்டால், கிரிக்கெட்டை தவிர என்ன விஷயங்கள் இருக்கிறதோ அதை மட்டும் தான் பேசுவோம். களத்திற்குள் ஒரு சீனியர் வீரராக நான் சில கருத்துக்களை சஞ்சு சாம்சன் இடம் கூறுவேன். போட்டி எவ்வாறு மாறுகிறது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நான் அவருக்கு ஆலோசனை வழங்குவேன்.
நாங்கள் களத்திற்கு வெளியே எவ்வளவு நட்பாக இருக்கிறோமோ அதே போன்ற ஒரு உணர்வு களத்திற்குள் இருக்காது. மொத்தத்தில் சஞ்சு சாம்சன் எனக்கு தம்பி மாதிரி. நான் அவருக்கு ஒரு அண்ணன் போன்ற உறவு தான் எங்களுக்கு இருக்கிறது. எனினும் களத்திற்கு வந்தால் நாங்கள் முற்றிலுமாக மாறி விடுவோம். ஒரு கேப்டனாக அவருக்கு என்ன தேவையோ அதனை நான் சொல்ல நினைப்பேன். அவருக்கு என்ன தேவையோ அதை அவர் புரிந்து கொள்வார்.