யுத்த நிறுத்தம் அவசியம்: இஸ்ரேல் – ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்த இருநாட்டு தலைவர்கள்
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் சர்வதேச மற்றும் பிராந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அவுஸ்திரேலியா மற்றும் மலேசியா அழைப்பு விடுத்துள்ளது.
பிராந்திய பதற்றங்களை தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளிடமிருந்தும் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்னில் இடம்பெறும் விசேட ஏசியான் மாநாட்டில் கலந்துக்கொண்ட அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகீம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
விடுதலை செய்யப்பட வேண்டும்
மேலும், காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து பேசவிரும்பவில்லை மாறாக பொது உடன்பாடு காணப்படும் உடனடி யுத்த நிறுத்தம் குறித்து பேசவிரும்புகின்றேன் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் இறுதியில் காசா குறித்த அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
எனினும் மலேசியாவும் ஹமாசும் கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன. எனினும் பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
உடனடி யுத்த நிறுத்தம்
இதேவேளை அக்டோர்பர் 7ஆம் திகதிக்கு பின்னர் காசாவில் காணப்படும் மோசமான மனிதாபிமான நிலை குறித்து அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத அவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், காசாவிற்கான பாதுகாப்பான தடையற்ற தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.