ஒரே டூத் பிரெஷை பல மாதங்களுக்கு பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பிரச்சினைகள் உறுதி
பொதுவாகவே அனைவரும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றோம்.
ஆனால் பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் டூத்ப்ரஷை (Tooth brush)குறித்து நம்மில் பலரும் பெரிதாக அக்கறை செலுத்துவது கிடையாது.
உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும் பலரும் வாய் சுகாதாரம் தொடர்பில் அக்கறை செலுத்துகின்றோமா என சற்று சிந்திக்க வேண்டும்.
காரணம் வாய் சுகாதாரம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்தூரிகையை (Tooth brush) நீண்ட நாட்கள் பயன்டுத்துவதால் ஏற்படும். பிரச்சினைகள் குறித்தும் எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பது குறித்து தெளிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக விளைவுகள்
தற்காலத்தில் பலரும் அதிகரித்த வேலைபளு காரணமாக சொந்த வேலைகளை முறையாக செய்துக்கொள்வதற்கும் ஆரோக்கியமான உணவை சமைத்து சாப்பிடுவதற்கும் கூட நேரம் ஒதுக்குவது கிடையாது.
இந்நிலையில் நாம் அன்றாட் பாவிக்கும் பொருட்கள் சிலவற்றை நீண்ட காலத்துக்கு மாற்றாமல் அது குறித்து விழிப்புணர்வு அற்ற நிலையில் பயன்படுத்தி வருகின்றோம். அதில் முக்கியமானது ஒரு பொருள் தான் பற்தூரிகை.
பற்களின் ஆரோக்கியம் கெடாமல் இருப்பதற்கும் வாய் சுகாதாரத்தை பேணுவதற்கும் சரியான இடைவெளியில் உங்கள் டூத்ப்ரஷை மாற்ற வேண்டியது அவசியம்.
நீண்ட நாட்களுக்கு ஒரே டூத்ப்ரஷை பாவிக்கும் போது பற்களில் இருக்கும் பாக்டீரியா, கசடுகளை முறையாக அகற்ற முடியாமல் போகும்.
எனவே ஒரு டூத்ப்ரஷை இத்தனை மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை டூத்ப்ரஷை மாற்ற வேண்டியது அவசியம் என பல் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டூத்ப்ரஷை நீண்ட நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் பல் சொத்தை, ஈறுகளில் வரும் நோய்கள் எனப் பல பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் போது நாம் பாவித்துக்கொண்டிருக்கும் டூத்ப்ரஷை நோயிலிருந்து மீண்ட பிறகு உடனடியாக மாற்ற வேண்டும்.
காரணம் உங்களின் டூத்ப்ரஷில் வைரஸ், பாக்டீரியா போன்றவை தொற்றிக்கொண்டிருக்கும். இதனால் மறுபடியும் அதே நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது.
நோயிலிருந்து மீண்டதும் புதிய டூத்ப்ரஷை பயன்படுத்துவதால் பற்களின் ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும்.
எலக்ட்ரிக் டூத்ப்ரஷ் பயன்படுத்துபவர்கள், அதன் தலைப்பகுதியை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்ற வேண்டும். குறிப்பாக சாதாரண ப்ரஷை விடவும் எலக்ட்ரிக் டூத்ப்ரஷ்கள் வேகமாக சுழல்வதால் வெகுவாக பிய்ந்து போகின்றன.
இது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பற்களில் அறுவை சிகிச்சையோ அல்லது ஈறுகளில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை எடுத்திருந்தாலோ, கடாயம் புதிய டூத்ப்ரஷை பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி வெளியூர்களுக்கு பயணம் செய்பவர்கள் பாவித்துக்கொண்டிருக்கும் டூத்ப்ரஷை எடுத்து செல்வதை விட புதிய டூத்ப்ரஷை வாங்கி பயன்படுத்துவது சிறந்தது. காரணம் நாம் பயணப்பைகளில் டூத்ப்ரஷை எடுத்துச் செல்லும் போது அழுக்குகள் கிரமிகள் தொற்றுவதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.
பெரியவர்கள் பயன்படுத்தும் டூத்ப்ரஷை விட குழந்தைகள் பயன்படுத்தும் டூத்ப்ரஷை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியம். குழந்தைகளின் டூத்ப்ரஷ் சிறியதாகவும் மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் சில சமயங்களில் வாயில் வைத்து கடிக்கின்றனர்.
அதனால் சீக்கிரமகவே உடைந்து போகும் வாய்ப்பு காணப்படுகின்றது. குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க குழந்தையின் டூத்ப்ரஷ் எப்படியிருக்கிறது என்பதை அடிக்கடி பெற்றோர்கள் கண்காணிக வேண்டியது முக்கியம்.