வேண்டுமென்றே திட்டமிட்ட செயலாக தான் நான் பார்க்கிறேன் : சீமான்..!
கரும்பு விவசாயி சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது,
கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்குத்தான். கடந்த தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ள அந்தக் கட்சி 71 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அந்தக் கட்சி கர்நாடகாவுக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும், ஆந்திராவுக்கு கேஸ் ஸ்டவ் சின்னம் வாங்கியிருக்கிறது. அக்கட்சியின் தலைவரே சொல்லியிருக்கிறார். கரும்பு விவசாயி சின்னத்தை நான் கேட்கவில்லை; அவர்களாகவே கொடுத்தார்கள் என்று. அதில், தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 11 மாநிலங்களுக்குச் சேர்த்து கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, இடைத்தேர்தல், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டிருக்கிறது. 7 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் இருப்பதிலேயே தனித்துவமான கட்சி என்று பார்த்தால், தி.மு.க., அ.தி.மு.க.வுக்குப் பிறகு நாம் தமிழர் கட்சிதான். அதை கணக்கில் கொள்ளாமல், அவர் முதலில் மனு கொடுத்ததாக கூறுகின்றனர்.
வெள்ள பாதிப்பு பணிகள் காரணமாக, நாங்கள் மனு அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருந்த கால அளவுக்குள்தான் நாங்களும் மனு அளித்தோம். டார்ச் லைட் சின்னத்தை ம.நீ.ம.வுக்கு ஒதுக்கியப் பிறகுதான் எங்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் விஷயமே எங்களுக்குத் தெரியவந்தது.
உண்மை என்னவென்றால், கர்நாடகாவில் இருந்து வந்தவர், கடந்த டிசம்பர் 17-ம் தேதி மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு முதல் நாளே கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. ஆனால், நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் எப்படி வந்தது தெரியுமா?
தேர்தல் அறிவித்து 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், இந்த முறை தேர்தல் அறிவிக்கவே இல்லை. டிசம்பர் 17-ம் தேதியே எப்படி அந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்தார்கள்?எனவே, திட்டமிட்டு செய்யப்பட்ட செயலாகத்தான் இதை நான் கருதுகிறேன். நாம் தமிழர் கட்சிக்கு இந்த சின்னம் இருக்கக் கூடாது என்றுதான் நான் இதைப் பார்க்கிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.