பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் ட்ரிக்ஸ்.. எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? நிபுணர் விளக்கம்
பொதுவாக பங்குச்சந்தை முதலீடுகள் என வரும் போது எந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் ? எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்கு கண்ணை மூடிக் கொண்டு பெரு நிறுவனங்களில் முதலீடு செய்கின்றனர் என்கிறார் பங்குச்சந்தை நிபுணரும், சாய் ஷேர்டியூட் நிறுவனத்தின் தலைவருமான தர்மஸ்ரீ ராஜேஸ்வரன்.
இதற்கு உதாரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டாடா குழுமத்தின் பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை நீண்ட நாள் முதலீடு மற்றும் டே டிரேடிங் என இரண்டுக்குமே பொறுத்தமானது என பங்குச்சந்தை நிபுணர் தர்மஸ்ரீ ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஏன் பெரு நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும்?: டாடா மோட்டார்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பங்கு விலை நன்றாக உயர்ந்தது, ஆனால் நேனோ காருக்கு வரவேற்பு கிடைக்காதது, லேண்ட் ரோவர் கார் பிரச்னை ஆகிய காரணங்களால் பங்கு பெருமளவில் குறைந்தது.
குறிப்பாக கொரோனா காலத்தில்700 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை என டாடா மோட்டார்ஸின் விலை சரிந்தது. தற்போது 1,000 ரூபாய்க்கும் மேல் ஒரு பங்கின் விலை அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை டாடா குழும நிறுவனங்களிலேயே அதிக சறுக்கலை கண்ட அதை விட வேகமாக மீண்டெழுந்த ஒரு நிறுவனம் ஆகும். இதற்கு காரணம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்தியது தான்.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் பெட்ரோல் செலவு குறைவு போன்ற காரணங்களை கூறலாம். ஆனால் இது தான் டாடா மோட்டார்ஸின் வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவியுள்ளது.
டாடா மோட்டார்ஸை பொறுத்தவரை சந்தை மூலதனம் என்பது 3.61 லட்சம் கோடியாக உள்ளது. இதன் ஆண்டு வருவாய் 3.50 லட்சம் கோடி, லாபம் என பார்த்தால் ஆண்டுக்கு 2,353 கோடி, நிறுவனத்தின் நிகர மதிப்பு 52,600 கோடி ரூபாய். நிறுவன புரமோட்டர்கள் வசம் 46.37% பங்குகளும், வெளிநாட்டு நிறுவனங்கள் வசம் 18.62% பங்குகளும் உள்ளன.
சில்லரை முதலீட்டாளர்கள் வசம் 18.62% பங்குகள் உள்ளன. நடப்பாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 1100 ரூபாய் வரை உயரும் என பங்குச்சந்தை நிபுணர் தர்மஸ்ரீ ராஜேஸ்வரன்.