டி20 போட்டி ஆடவே லாயக்கில்லாத வீரர் கேப்டனா.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை விளாசிய முன்னாள் வீரர்
2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அவர் டி20 போட்டிகளில் சரியாக ஆடாத வீரர் என்ற விமர்சனம் இருக்கிறது.
பந்துவீச்சாளராகவோ, பேட்ஸ்மேனாகவோ எந்த வகையிலும் டி20 போட்டிகளில் அவர் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்படவில்லை. அப்படி இருக்கையில் அவரை எப்படி கேப்டனாக நியமித்து இருக்கிறது சன்ரைசர்ஸ் அணி என கேள்வி எழுப்பி இருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016இல் ஐபிஎல் கோப்பை வென்றது. அதன் பின் அந்த அணி ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. இந்த நிலையில் அந்த அணியில் கடந்த சீசன்களில் எய்டன் மார்கிரம், புவனேஸ்வர் குமார் போன்றோர் கேப்டனாக இருந்தனர். ஆனால், அவர்கள் செயல்பாட்டில் திருப்தி இல்லாத நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
பாட் கம்மின்ஸ் சிறந்த டெஸ்ட் வீரர். டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சிலும், பின்வரிசை பேட்டிங்கிலும் ஆல் – ரவுண்டராக சிறப்பாக செயல்படக் கூடியவர். ஒருநாள் போட்டிகளிலும் நல்ல ஆல் – ரவுண்டர் தான். ஆனால், டி20 போட்டிகளில் அவரால் இத்தனை ஆண்டுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. அதன் காரணமாக அவர் ஆஸ்திரேலிய டி20 அணியிலேயே நிரந்தரமில்லாத சாதாரண வீரராகத் தான் இருக்கிறார்.
இந்த நிலையில், ஹைதராபாத் அணியின் பிளேயிங் 11இல் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் ஒரு இடத்தை பாட் கம்மின்ஸ்-க்கு கொடுப்பதே தவறு, இதில் கேப்டன் பதவி வேறா என்ற தொனியில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“நீங்கள் பாட் கம்மின்ஸை கேப்டனாக்கிவிட்டீர்கள், ஆனால் அவரது சமீபத்திய ஐபிஎல் செயல்பாட்டை பார்த்தீர்களா? கவனமாகச் சரி பார்க்கவும். அவர் பந்துவீச்சில் நிறைய ரன்களை விட்டுக்கொடுக்கிறார். மேலும், பேட்டிங்கில் அவ்வளவு ரன்களை எடுக்கவில்லை. ஒரு ஐபிஎல் அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். அவர் பவர்பிளேயிலோ அல்லது கடைசி ஓவர்களிலோ பந்து வீசுவதில்லை. அவர் அந்த வேலைகளை எல்லாம் செய்யப் போவதில்லை என்றால், ஐபிஎல்லில் நூறு சதவீதம் பிளேயிங் XI இல் இடம் பெற உத்திரவாதமில்லாத ஒரு வீரருக்காக உங்களின் வெளிநாட்டு வீரர்களின் இடத்தில் 25 சதவீதத்தை அளிக்கப் போகிறீர்கள். அதனால்தான் 11 ஆஸ்திரேலியர்கள் விளையாடும் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இல்லை, அவர் உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், டி20 அணியின் கேப்டனாக இருக்கவில்லை.” என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.