இன்று சுமூக முடிவு எட்டப்படுமா ? இன்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய குழுவை அமைத்தல், நிலுவையில் இருக்கக்கூடிய 91 மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை உயர்த்தி வழங்குதல், பணி நியமன ஆணை வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த ஜனவரி மாதத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சூழலில் ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, இந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 6-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று 6-ம் தேதி தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் நடைபெறக்கூடிய முத்தரப்பு பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கத்தினரின் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் இந்த ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர். குறிப்பாக 15-வது ஊதிய குழுவை அமைப்பது தொடர்பாக குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதில் நான்கிற்கும் மேற்பட்ட கோரிக்கைகள் போக்குவரத்துத் துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், நிலுவையில் இருக்கக்கூடிய ஓய்வு பெற்றவர்கள் உள்பட அனைவருக்குமான அகவிலைப்படி உயர்வு குறித்தான அறிவிப்பு மட்டும் மீதமுள்ள நிலையில், இது தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 6-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.