ஷாருக்கானுக்கு ரோல்ஸ்-ராய்ஸ்; சல்மானுக்கு பென்ட்லி – அம்பானி வீட்டில் வலம் வரும் காஸ்ட்லி கார்கள்!

இன்டர்நெட்டையே சூடாக்கிக் கொண்டிருக்கிறது அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சி. ஜூலை 12-ம் தேதிதான் கல்யாணம். இப்போது நடந்தது `Pre Wedding Ceremony’. அதாவது இப்போதே அதற்கான கொண்டாட்டங்களைத் தொடங்கி விட்டிருக்கிறார்கள். ஹாலிவுட்டிலிருந்து பாலிவுட் வரை விவிஐபிக்கள் கலந்து கொண்டு சோஷியல் மீடியாக்களை அதிர வைத்திருக்கிறார்கள்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவான்க்கா ட்ரம்ப் என இன்டர்நேஷனல் செலிபிரிட்டிகள் வலம்வர, குஜராத்தின் ஜாம்நகரே அதிர்ந்தது. பாலிவுட்டில் ஷாருக்கான், தீபிகா, அமீர்கான், சல்மான், ரன்பீர் கபூர், கரீனா கபூர் என்று செலிபிரிட்டிகளும் கலந்து கொண்டு கொண்டாடியிருக்கிறார்கள். நம் ஊரிலிருந்து நடிகர் ரஜினிகாந்த்தும் குஜராத் வரை ஒரு எட்டுப் போய்விட்டு வந்து, அம்பானி தன் மகன் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றிச் சொல்லியிருந்தார்.
இதில் செலிபிரிட்டிகளைத் தாண்டி மக்களைக் கவர்ந்த இன்னொரு விஷயம் – அவர்களை பிக்-அப் செய்து டிராப் செய்த காஸ்ட்லி கார்கள்தான். திருமணம் குஜராத்தில் நடப்பதால், மும்பை – டெல்லி போன்ற மாநகரங்களில் இருந்து வரும் செலிபிரிட்டிகளை விமான நிலையத்திலிருந்து அழைத்து வர காஸ்ட்லி சொகுசுக் கார்களை ஏற்பாடு செய்திருந்தது அம்பானி குடும்பம்.
இதில் ஷாரூக்கான், ரன்பீர் கபூர் போன்றவர்களை ஏர்போர்ட்டிலிருந்து பிக்-அப் டிராப் செய்ய, லேட்டஸ்ட் ஜெனரேஷன் ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் EWB எனும் லிமோசின் கார் பறந்திருக்கிறது. ரன்பீரும் ஷாருக்கும் ரோல்ஸ்-ராய்ஸில் செல்லும் வீடியோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகின்றன. ஷாருக்கான் மற்றவர்களை ரோல்ஸ்-ராய்ஸில் வரச் சொல்லிவிட்டு, வேனில் வந்ததாகவும் சொல்கிறார்கள்.
முகேஷ் அம்பானியிடம் ஏகப்பட்ட சொகுசுக் கார்கள் இருப்பது இந்தியாவே அறியும். இதில் அதிகபட்சமாக ரோல்-ஸ்ராய்ஸ் கார்கள்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள். ரோல்ஸ்-ராய்ஸிலேயே எஸ்யூவி மற்றும் செடான் டைப் எனப் பலவகை உண்டு.
இதில் கோஸ்ட் EWB என்பது செடான் வகை. நார்மலாக ஒரு Ghost மாடல் ரோல்ஸ்ராய்ஸில் உண்டு. இதுவே சுமார் 5 மீட்டர் நீளம். இந்த EWB, நார்மல் கோஸ்ட்டைவிட இன்னும் 170 மிமீ நீளம். ஆனால், இன்ஜின் கோஸ்ட்டில் இருக்கும் அதே 6.75 லிட்டர், ட்வின் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 563bhp மற்றும் 820Nm டார்க். இதன் விலை சுமார் 8 கோடி ரூபாய். அவர்களை பிக்அப் செய்த EWB காரின் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 8 கோடி ரூபாய்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு பென்ட்லி பென்டாய்கா எனும் லக்ஸூரி காரை இன்வைட் செய்ய அனுப்பியிருந்தார்கள். நீல நிற பென்ட்லியோடு, செக்யூரிட்டி வாகனப் படை புடை சூழ சல்மான் கான் திருமண நிகழ்ச்சிக்கு வரும்போது ஒரே ஆரவாரம். பென்ட்லி நிறுவனத்திலிருந்து வரும் முதல் எஸ்யூவி இதுதான். இதில் 4.0லிட்டர், V8 பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 542bhp மற்றும் 770Nm டார்க். இதன் விலை சுமார் 4.10 கோடி ரூபாய்.
செலிபிரிட்டிகளின் வாரிசுகளுக்கு என்றால், ரோல்ஸ்-ராய்ஸ் கிடையாது போல! அவர்களுக்கு ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி. ஷாருக்கானின் மகனுக்கு ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி. குஜராத் முழுக்க இந்த எஸ்யூவியில்தான் ஊர் சுற்றியிருக்கிறார்கள் விஐபிகளின் வாரிசுகள். பெட்ரோல், டீசல் என இரண்டிலும் கிடைக்கும் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகளும் செம சொகுசு கார்கள்தான். இதில் 35 ஸ்பீக்கர்கள் கொண்ட மெரிடியன் சரவுண்ட் சிஸ்டம் உண்டு. சொல்லப்போனால் ரோல்ஸ்-ராய்ஸ் கார்களைவிட ஸ்மூத்தான பயணம் இதில் கிடைக்கலாம். காரணம் – வீல் வைப்ரேஷன், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டயர் சத்தம் என்று மொபைல் போனில் உள்ள தொழில்நுட்பங்களெல்லாம் இந்த ரேஞ்ச்ரோவரில் இருக்கின்றன. இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 2.40 கோடி முதல் 4 கோடி வரை வருகிறது.
இது தவிர அம்பானி நிகழ்ச்சி என்ட்ரன்ஸில் பிஎம்டபிள்யூவின் iX எனும் சொகுசு கார்களும் அங்கிட்டும் இங்கிட்டுமாக சத்தமில்லாமல் விஐபிக்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தன. ரித்தேஷ் தேஷ்முக் போன்ற செலிபிரிட்டிகள் இதில்தான் பிக்அப் டிராப் செய்யப்பட்டனர். பிஎம்டபிள்யூவின் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் வாகனம் இந்த iX. இதில் 326 bhp மற்றும் 630Nm டார்க் கொண்ட இரட்டை எலெக்ட்ரிக் மோட்டார்கள் இருக்கின்றன. இதன் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் 1.21 கோடி ரூபாய் வருகிறது.