மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே பிரம்மாண்ட ரெக்கார்டு.. அதிவேக பந்து வீசிய தென்னாப்பிரிக்க வீராங்கனை
மகளிர் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக அதிக வேக பந்தை வீசி சாதனை படைத்து இருக்கிறார் தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில்.
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கிறார் ஷப்னிம் இஸ்மாயில். கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனினும், அதற்கு முன்பில் இருந்து, இப்போது வரை மகளிர் கிரிக்கெட்டின் அதிவேக பந்துவீச்சாளர் இவர் மட்டுமே.
2016இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 128 கிமீ வேகத்தில் அவர் வீசிய பந்து அப்போது மகளிர் கிரிக்கெட்டின் அதிவேக பந்தாக இருந்தது. அதன்பின் 2022 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கிமீ வேகத்துக்கும் அதிகமாக பந்து வீசி இருந்தார்.
தனது 128 கிமீ சாதனையை 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் முதன்முறையாக 128.3 கிமீ வேகத்தில் பந்து வீசி முறியடித்தார். பின்னர் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 132.1 கிமீ வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்து இருக்கிறார் ஷப்னிம் இஸ்மாயில். தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து இருக்கிறார்.
ஷப்னிம் இஸ்மாயில் பந்து வீசும் வேகத்தில் சாதனை படைத்த போதும் அதிக ரன்களை வாரிக் கொடுத்து அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டும் வீழ்த்தி இருந்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேபிடல்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.