ஸ்ரேயாஸ், இஷான் தலையில் குட்டு வைத்த சச்சின்.. ட்விட்டரில் அதிரடி பதிவு.. இனியாவது திருந்துங்க

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆட மறுத்த விவகாரம் இந்தியகிரிக்கெட்டில் பூதாகரமாக வெடித்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

மாநிலங்கள் இடையே நடைபெறும் ரஞ்சி ட்ராபி டெஸ்ட் தொடர் மூலம் தான் இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்ய முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. ஐபிஎல் தொடர் வரும் வரை அதுவே நடைமுறையாக இருந்தது. ஆனால், ஐபிஎல் தொடரின் வரவுக்கு பின் இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் ரஞ்சி ட்ராபி தொடரில் பங்கேற்பதை நிறுத்தினர். பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதை மட்டுமே அவர்கள் விரும்பினர்.

பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காததால் அவர்கள் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆட மறுத்தார்கள். ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடி ரன் குவித்தால் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறியும் அவர்கள் இருவரும் அதை புறக்கணித்து 2024 ஐபிஎல் தொடருக்கு தங்களை தயார்படுத்தும் வகையில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதனால், அவர்களின் பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிசிசிஐ-யின் நடவடிக்கையை வரவேற்கும் வகையில் ரஞ்சி ட்ராபியின் முக்கியத்துவம் குறித்து சச்சின் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். தற்போது நடைபெற இருக்கும் ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதை அடுத்து தனது ரஞ்சி ட்ராபி அனுபவங்களையும், அது எந்த வகையில் ஒரு வீரருக்கு உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

“ரஞ்சி ட்ராபி அரை இறுதிப் போட்டிகள் அற்புதமாக இருந்தது. மும்பை அணி அரை இறுதியில் சிறப்பாக ஆடி இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. மற்றொரு போட்டியில் மத்திய பிரதேசம் – விதர்பா அணிகள் சரிசமமாக போட்டி போட்டு ஆடி வருகின்றன.

எனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் மும்பை அணிக்காக ஆடுவதில் ஆர்வத்துடன் இருந்தேன். எங்கள் அணியில் 7 – 8 இந்திய வீரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் நான் வளர்ந்தது மகிழ்ச்சியான தருணம்.

இந்திய அணி வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடினால் அது இளம் வீரர்களின் போட்டித் தரத்தை உயர்த்தும். அதன் மூலம் சில சமயம் புதிய திறமையாளர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். அது தேசிய அணி வீரர்களுக்கு தங்கள் அடிப்படையை திரும்பி பார்க்கும் முயற்சியாகவும் இருக்கும்.

உயர்ந்த நிலையில் இருக்கும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆடினால் அது ரசிகர்களையும் உள்ளூர் தொடர்களை நோக்கி இழுக்கும். அவர்கள் தங்கள் மாநில அணிகளை ஆதரிக்கத் துவங்குவார்கள். பிசிசிஐ உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அழிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என சச்சின் தனது நீண்ட பதிவில் கூறி இருக்கிறார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *