அண்ணா, எம்ஜிஆர் இறுதி சடங்குக்கு வந்த மாதிரி மக்கள் வெள்ளம்! விஜயகாந்த் பவர்! நெப்போலியன் நெகிழ்ச்சி
அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த மக்கள் கூட்டத்திற்கு இணையாக கேப்டன் விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கூட்டம் இருப்பதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார் நடிகர் நெப்போலியன்.
இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டி: விஜயகாந்த் மறைவு, தமிழ்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு. பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைவின்போது நான் சிறு பிள்ளை. அப்போது வந்த மக்கள் கூட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய ஜனசமுத்திரத்தில் அறிஞர் அண்ணா உடல் மெரினா கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதுக்கப்புறம் எம்ஜிஆர் அவர்களுடைய மறைவை பார்த்திருக்கிறேன். அதுக்கப்பறம் ஜெயலலிதா அம்மாவுடைய மறைவை பார்த்திருக்கிறேன். கலைஞருடைய மறைவை பார்த்து இருக்கிறேன். அதற்கு நிகரான ஒரு கூட்டம்தான் இன்னைக்கு விஜயகாந்த் அவர்களுக்கும் கூடி இருக்குது.
ஒட்டுமொத்த மக்களும் சென்னையில் குவிந்துள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருக்குது. எங்கிருந்து பார்த்தாலும், எந்த தொலைக்காட்சியை திருப்பினாலும், மக்கள் வெள்ளமாக பார்க்க முடிகிறது. இந்த ஜன சமுத்திரத்தில் நானும் வந்து பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் உள்ளது.
என்னுடைய குடும்ப சூழ்நிலை, என்னுடைய குழந்தைகளின் சூழ்நிலையினால் நான் எல்லாத்தையும் விட்டுவிட்டு, அரசியலை விட்டுட்டு, சினிமாவை விட்டுட்டு அமெரிக்காவில் உள்ளேன். நேற்று மகன் ஆசைப்பட்டதால் கப்பலில் பயணம் செய்ய அழைத்துப் போய்விட்டு காரை ஓட்டிக்கொண்டு சாலையில் வந்தபோதுதான் குஷ்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தகவலை சொன்னார். அப்போது இரவு 10 மணி. என்னால் அதற்கு மேல் காரை ஓட்ட முடியவில்லை. அங்கேயே ஒரு ஹோட்டலில் குடும்பத்தோடு தங்கிவிட்டு பிறகுதான் கிளம்பினேன். அந்த அளவுக்கு விஜயகாந்த் மறைவு, அதிர்ச்சியளித்தது. இவ்வாறு நெப்போலியன் தெரிவித்தார்.