Sivakarthikeyan: ‘அனிமல்’ படத்தை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்-வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

வெளியாகி 3 மாதங்கள் ஆகியிருந்தாலும், இன்றுவரை ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் படமாக இருக்கிறது, அனிமல். இந்த படம் குறித்து பல்வேறு தரப்பினருக்கு பலவாறான கருத்துகள் இருந்தாலும், செலிப்ரிட்டிகள் இது குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதைதான் பலரும் கவனிக்கின்றனர். அந்த வகையில், அனிமல் படத்தை சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

அனிமல் திரைப்படம் சர்ச்சையாக காரணம் என்ன?

தெலுங்கு திரைப்பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய படம், அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அனில் கபூர், பாபி டியோல், த்ரிப்டி டிமிட்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். பெரிய பணக்கார வீட்டில் மகனாக பிறக்கும் ரன்பீர் கபூர், தனது தந்தைக்காக எந்த எல்லையையும் கடக்கும் மகனாக இருக்கிறார். அதற்கு குறுக்கே யார் வந்தாலும்-அது தனது காதல் மனைவியாக இருந்தாலும் அவர்களையும் கொலை செய்ய தயங்குவதில்லை என்ற அளவிற்கு மனதளவில் மிகவும் பாதிப்படைந்த கேரக்டராக நடித்திருந்தார். இதில் அவரது பெயர், ‘ரன்விஜய் சிங்’. ராஷ்மிகா மந்தனா, இதில் கீதாஞ்சலி எனும் தெலுங்கு பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

அனிமல் படம், டிரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வந்தது. இப்படத்தில் பெண்களை காண்பித்த விதம் மிகவும் கீழ்த்தரமாக இருந்ததாகவும், பெண்களை அடக்குமுறை செய்யும் வகையில், படத்தின் கதாப்பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருந்ததாகவும் பலர் படத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். உலகம் இந்த அளவிற்கு முன்னேறிய காலத்திலும், இன்னும் இப்படியெல்லாம் பெண்களை சித்தரிக்கும் வகையில் படம் எடுக்கலாமா? என்று பலர் கேள்வியெழுப்பி வந்தனர்.

அனிமல் படத்தை புகழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்:

அனிமல் படம் பாசிடிவாக பதிவிட்ட சில பிரபலங்கள், நெட்டிசன்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகினர். அப்படி, மக்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான நபராக இருக்கிறார், சிவகார்த்திகேயன். சமீபத்தில் ஒரு பிரபல ஊடகம் நடத்திய செலிப்ரிட்டீஸ் சந்திப்பில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். இதில் அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவும் கலந்து கொண்டார். அப்போது அப்படம் குறித்து பேசிய சிவா, அனிமல் படம் பயங்கரமாக இருந்ததாகவும், படத்தை விட பிரதீப்பின் நேர்காணல்கள் இன்னும் நன்றாக இருப்பதாகவும் கூறினார். அவர், எதையும் நேர்படையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சிவாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்:

சிவகார்த்திகேயன் அனிமல் படத்தை புகழ்ந்து பேசியதை அடுத்து பலரும் அவர் மீது இணையத்தில் வெறுப்பு காட்ட ஆரம்பித்தனர். ஒரு சிலர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அவர் கூறிய கருத்தோடு இணைத்து தனிப்பட்ட முறையில் அவரை அட்டாக் செய்து வருகின்றனர்.

எஸ்.கே.கூறியது சரியா?

சிவகார்த்திகேயன் அனிமல் படத்தை பற்றி கூறியது சரியா தவறா? என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. காரணம், அனிமல் படத்தை இருவேறு கோணத்தில் பார்க்கும் ரசிகர்கள் உள்ளனர். என்னதான் இப்படத்தை பலர் குறை கூறினாலும்,மூன்றரை மணி நேரம் ரசிகர்களை கதையுடன் ஒன்ற வைக்கும் அளவிற்கு இருந்தது, அனிமல் படத்தின் திரைக்கதை. சினிமாவை விரும்பி பார்ப்பவர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்திருந்தது. மேலும், படத்தில் இடம் பெற்றிருந்த சிறு சிறு விவரங்களும் பலரை ஈர்த்தது. சந்தீப் வங்கா ரெட்டி, தவறான மனநிலை கொண்டிருக்கும் நபராக இருந்தாலும், அவர் நல்ல இயக்குநர் என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது. இதனால், சிவகார்த்திகேயன் அனிமல் படத்தை பற்றி கூறிய கருத்துக்கு சிலர் எதிர்ப்பும் சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *