கிரெடிட் கார்டு வழங்குவதில் புதிய மாற்றம்.. ஆர்பிஐ வெளியிட்ட புது உத்தரவு..!
இந்தியாவில் கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. கிரெடிட் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைகளும் கூட வழங்கப்படுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளது. கிரெடிட் கார்டு நெட்வொர்க்குகள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த புதிய வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
இதன் படி அங்கீகரிக்கப்பட்ட கார்டு நெட்வொர்க்குகள் (ரூபே, மாஸ்டர் கார்டு, விசா போன்றவை), வங்கிகள் மற்றும் NBFC இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இப்படி ஒரு வாடிக்கையாளர் வாங்கும் கடன் அட்டைக்கு எந்த நெட்வொர்க்கை பயன்படுத்துவது என்பது குறித்த முடிவை கார்டு வழங்கும் நிறுவனமே முடிவு செய்கிறது.
அது ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிறுவனமாக இருந்தாலும், இந்த முடிவு கார்டு வழங்கிய நிறுவனம் மற்றும் நெட்வொர்க்குகள் இடையிலான ஒப்பந்தங்களால் ஏற்படுகின்றன.
இதனை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி, இது போல கார்டு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நெட்வொர்க்குகள் இடையிலான ஒப்பந்தம் காரணமாக வாடிக்கையாளர்களுக்கான பயன்பாட்டு வாய்ப்புகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுவதை கண்டறிந்தது.
எனவே பேமெண்ட் அண்ட் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007இன் கீழ் ரிசர்வ் வங்கி புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது.
1. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், அதற்கான நெட்வொர்க்குகளுடன் எந்த ஒரு உடன்பாடும் செய்யக் கூடாது, ஏனெனில் இது மற்ற கார்டு நெட்வொர்க்குகளின் சேவைகளை பயன்படுத்துவதை தடுக்கிறது.
2. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு கார்டு வழங்கும் நேரத்தில், பல்வேறு கார்டு நெட்வொர்க்குகளில் இருந்து தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
அதாவது எந்த நெட்வொர்க்கை பயன்படுத்துவது என்பதை வாடிக்கையாளரே முடிவு செய்வார். ஏற்கனவே கிரெடிட் கார்டு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு புதுப்பித்தலின் போது இந்த வாய்ப்பை வழங்க வேண்டும்.
3. இதன் படி அங்கீகரிக்கப்பட்டி கார்டு நெட்வொர்க்குகளின் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப்பரேச்கன், டைனர்ஸ் கிளம் இண்டெர்நேஷ்னல் லிமிடெட், மாஸ்டர் கார்டு ஆசியா/ பசிபிக் பிரைவேட் லிமிடெட், நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா – ரூபே மற்றும் விசா வேர்ல்டு வைடு லிமிடெட்.
4. அனைத்து கிரெடிட் கார்டு நிறுவனங்களும் நெட்வொர்க்குகளும் இதனை முறையாக பின்பற்ற வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய வழிமுறைகள் 10 லட்சத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கும் கார்டு நிறுவனங்களுக்கு பொருந்தாது என ரிசர்வ் வங்கி விளக்கம் தந்துள்ளது. அதே போல தங்கள் சொந்த நெட்வொர்க்கையே பயன்படுத்தும் கார்டுகளுக்கும் இது பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கான இந்த புதிய வழிமுறை மார்ச் 6, 2024 என்ற தேதியில் இருந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.