கிரிக்கெட் வரலாற்றிலேயே இப்படி நடந்தது இல்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ பயிற்சி
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவ முகாமில் பயிற்சி வழங்க உள்ளதாக அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பின் தலைவர் அறிவித்து இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் கடந்த சில மாதங்களாக கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. 2023 ஆசிய கோப்பை மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடர்களில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததில் இருந்தே அந்த அணிக்கு பிரச்சனைகள் துவங்கி விட்டது. அணியின் பயிற்சியாளர் குழு மொத்தமாக மாற்றப்பட்டது. தேர்வுக் குழு, அணியின் இயக்குனர், கேப்டன் என எல்லோரையும் மாற்றியும் அந்த அணி வெற்றிப் பாதைக்கு திரும்பவில்லை.
இதனிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பும் மாற்றப்பட்டு இருக்கிறது. மொஹ்சின் நக்வி என்ற அரசியல்வாதி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார். அவர் நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸ் அடிப்பதே இல்லை. பாகிஸ்தான் மைதானத்தில் எங்காவது சிக்ஸ் அடிக்கப்பட்டால் வெளிநாட்டு வீரர்கள் தான் சிக்ஸ் அடிக்கிறார்கள் என நான் நினைத்துக் கொள்கிறேன்.” என்றார்.
மேலும், “பாகிஸ்தான் வீரர்கள் சிக்ஸ் அடிக்கக் கூட போதிய சக்தி இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களின் உடற்தகுதியை விரைவாக மேம்படுத்த வேண்டும் என நான் கிரிக்கெட் அமைப்பு அதிகாரிகளிடம் கூறி இருக்கிறேன். அடித்து நியூசிலாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகள் பாகிஸ்தானுடன் ஆட உள்ளன. அடுத்து டி20 உலகக்கோப்பை தொடர் உள்ளது. எப்போது இவர்கள் பயிற்சி செய்வார்கள்? நேரமே இல்லை.” என்றார்.
மேலும், “ஆனால், குறுகிய காலம் எங்களுக்கு கிடைத்துள்ளது. மார்ச் 25 முதல் ஏப்ரல் 8 வரை காகுல் ராணுவ முகாமில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்ய உள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் அவர்களின் பயிற்சியில் உதவி செய்ய இருக்கிறார்கள். அது கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் என நம்புகிறேன்” என அவர் கூறி இருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கிரிக்கெட் அணி சரியாக ஆடவில்லை என்பதால் ராணுவ முகாமுக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்பட்டதாக தெரியவில்லை.