2024 புத்தாண்டின் முதல் ஏகாதசி எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்!
மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.
அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவு வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஏகாதசி விரதத்திற்கான காரணம்
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.
விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். அன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை
ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை செய்துவிட்டு மகாவிஷ்ணுவை மனதில் வழிபட வேண்டும். அன்று முழுவதும் உண்ணாநோன்பு இருப்பது நல்லது. தாகசாந்திக்காக தண்ணீர் குடிக்கலாம். அதேபோல் உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம்.
ஏகாதசி எப்போது?
2024ஆம் ஆண்டின் முதல் ஏகாதசி ஜனவரி 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மார்கழி மாதத்தின் கிருஷ்ண பக்ஷத்தின் ஏகாதசி திதி ஜனவரி 7 ஆம் தேதி நள்ளிரவு 12:41 மணிக்குத் தொடங்கி மறுநாள் ஜனவரி 8 ஆம் தேதி நள்ளிரவு 12:46 மணிக்கு முடிவடையும். இது சர்வ ஏகாதசி. சர்வ ஏகாதசி அன்று காலை 7:15 முதல் 10:03 வரை சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தில் ஏகாதசி பூஜை செய்யலாம். சர்வ ஏகாதசி விரதத்தை ஜனவரி 8 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 7:15 முதல் 9:20 வரை கலைக்கலாம்.
சர்வ ஏகாதசி வழிபாடு
சர்வ ஏகாதசி அன்று விஷ்ணுவுக்கு தேங்காய், வெற்றிலை, நெல்லிக்காய், மாதுளம் பழம் அர்ச்சனை செய்யலாம். இது தவிர ஸ்ரீ ஹரியின் கீர்த்தனைகளைப் பாடுவதும், கதையைப் படிப்பதும், ஆரத்தி பாடுவதும் ஏகாதசி அன்று மிகவும் மங்களகரமானது.