குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு நான் உடன்படுகிறேன் : தமிழிசை
துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது , “9 வயது சிறுமியின் கொடூர கொலை கேட்டதில் இருந்து நிலை குலைந்து போய் இருக்கிறேன். இங்கு இருக்கும் பெண்களின் மனநிலைதான் ஒரு தாயாக எனக்கும் இருக்கிறது. அதனால்தான் சில காவல் பாதுகாப்பு சிக்கல்கள் இருந்தாலும், அவர்களுடன் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதற்கு நான் இங்கு வந்து சேர்ந்தேன்.நீங்கள் எங்கள் பக்கத்தில் நிற்பது மிகப்பெரிய ஆறுதல் என்று குழந்தையின் தாயார் என்னிடம் கூறினார். விரைவு சிறப்பு நீதிமன்றம் மூலம், உடனடியாக ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்கு நான் உடன்படுகிறேன்.
சில நேரங்களில் சட்டங்களை நாம் கையில் எடுக்க முடியாவிட்டாலும், உணர்வு ரீதியாக அவர்கள் பக்கம் நான் இருக்கிறேன். போராட்டம் செய்யும் மக்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அதேபோல், இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏற்கனவே இங்கு போதைப்பொருள் பயன்பாடு புழக்கம் இருக்கக்கூடாது என்பதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் போதைப்பொருளை புழக்கத்தில் வைத்திருந்த சிலருக்கு புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் துணைபுரிந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.இந்த சம்பவம் போதைப்பொருள் பயன்படுத்தியதால் மட்டும் நடந்த நிகழ்வாக இல்லாமல், பாதை மாறிய இளைஞர்களின் செயலாலும் நடைபெற்று இருக்கிறது. இது சமுதாயத்தின் அவலம். இரண்டு மிருகங்கள் பிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல், அவர்களுக்குத் துணையாக யாரேனும் இருந்தார்களா என்பது குறித்து ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களும் பிடிபட்டால், அவர்களுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். மக்களோடும் அந்த தாயோடும் நான் உறுதுணையாக இருக்கிறேன். போதைப் பொருள் புழக்கத்திற்குக் காரணமாக இருப்பவர்கள் சிலர் அரசியல் பின்புலத்திலும் இருக்கிறார்கள். நிச்சயமாக அனைவரும் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.புதுச்சேரியின் எல்லைகள் கண்காணிக்கப்படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நிச்சயமாக புதுச்சேரியின் எல்லைகளை கண்காணிக்கப்படும், ஏற்கனவே ரயில் பயணத்தில் சிலர் பிடிபட்டார்கள். இந்த குற்றத்திற்கு ஆளானவர்கள் நிச்சயம் எந்த வகையிலும் தப்பிக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.