முதலமைச்சர் ஸ்டாலினுடன் ராமதாஸ் சந்திப்பு! 2 பேரும் பேசி எவ்வளவு நாளாச்சு! காத்திருக்கும் ட்விஸ்ட்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
சுமார் 35 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் பரஸ்பர நலம் விசாரிப்பு உள்ளிட்ட இன்னும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் டாக்டர் ராமதாஸ் மிக விரிவாக விளக்கிக் கூறியிருக்கிறார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 6 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், அதற்குப் பிறகு சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அந்த வாய்ப்பை பிகார், கர்நாடகம், ஒதிஷா, ஆந்திரம் போன்ற மாநிலங்களிடம் நாம் இழந்து விட்டோம் என்று ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதை சுட்டிக்காட்டிய ராமதாஸ், அதற்காகவாவது தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டார். தாம் கையோடு கொண்டு சென்ற சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரும் கடிதத்தையும் முதல்வரிடம் அவர் வழங்கினார்.
அதேபோல் தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 20 மாதங்கள் ஆகும் நிலையில், அதற்கான சட்ட முன்வரைவு இன்னும் நிறைவேற்றப்படாததையும் முதலமைச்சரின் கவனத்திற்கு ராமதாஸ் கொண்டு சென்றார். இதனிடையே ராமதாஸ் முன்வைத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, வன்னியர் 10.5% இட ஒதுக்கீடு ஆகியவை குறித்த கருத்துகளை கூர்ந்து கவனித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின் போது பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.