உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள்…

பசுவின் சாணத்தை எடுத்து அதனை சுட்டு சாம்பலாக்கிய பஸ்மமே சுத்தமான விபூதி ஆகும். விபூதி தரிப்பது ஆன்மீக சம்பச்தமான நன்மைகள் விளைவதுடன், உடல்நலம் சார்ந்த நன்மைகளும் உண்டாகும் என்பது சான்றோர்களின் கருத்தாகும். திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பூசுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.

இதன் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவ என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி உத்தூளனமாக (நெற்றி முழவதும்) அல்லது திரிபுண்டரிகமாக (3 கோடுகளாக) திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும். கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள்;, குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.

மேலும் சில நன்மைகளைப் பார்ப்போம் :-
வாத, பித்த, கப நாடிகளை சமநிலைப்படுத்தக் கூடியது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை தூய்மையாக்கும்.
ஆணவம், கர்மம், மாயை என்ற மும் மலங்களை நீங்கச் செய்யும்.

விதிப்படியமைந்த திருநீற்றை உட்கொண்டால் உடம்பின் அசுத்தங்கள்அனைத்தையும் போக்கி நாடிநரம்புகள் அனைத்திற்கும் வலிமையை கொடுக்கும்.

உடலுக்கும், உயிரிற்கும், இம்மையிற்கும், மறுமையிற்கும் உயர்வளிக்கும் விபூதியினை தினமும் நாம் அணிந்து உயர்வடைவோமாக.

திருநீறு விளக்கம் :

ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபூதி) குறிக்கின்றது.

வெந்துஅனைவரும் பிடி சாம்பலாக ஆவார்….
திருநீற்றை 4 வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1) கல்பம் – கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே
கல்பத் திருநீறு.

2) அணுகல்பம் – காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு

3) உபகல்பம் – மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு

4) அகல்பம் – அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு

“மந்திரமாவது நீறு” – திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம்.
மன் + திறம் = மந்திரம். மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு.

நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும். புருவ நடுவே தியான நிலை; ஆத்ம பிரகாசம் உள்ளது. அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர்.

புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர்.

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள்

திருநீறு அணிவதால்
** தடையற்ற இறைச் சிந்தனை,
** உயர்ந்த நற்குணங்கள்,
** குறைவற்ற செல்வம்,
** நல்வாக்கு,
** நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும்.
பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *