இந்த உணவுகளை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்காதீங்க.. எச்சரிக்கும் மருத்துவர்கள்
“சாப்பிடும்போது பேசாத, சாப்பிடும்போது தண்ணீ குடிக்காத’’ என்று நம் வீட்டு பெரியவர்கள் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும், பின்னும் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று மருத்துவ நிபுணர்களும் பல சந்தர்பங்களில் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
ஆனாலும், சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற உணர்வை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், இவ்வாறு தண்ணீர் அருந்தினால் சில சமயம் உணவு ஒவ்வாமை ஏற்படக் கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் கீழ்காணும் உணவுகளை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் அருந்தக் கூடாது என்றும் எச்சரிக்கின்றனர்.
காரமான உணவுகள் : மசாலா நிறைந்த காரமான உணவுகளை சாப்பிடும்போது, அந்த காரத்தை மட்டுப்படுத்த நாம் கடகடவென தண்ணீரை குடிப்போம். ஆனால், இவ்வாறு தண்ணீர் அருந்துவதால் ஏதோ ஒரு பகுதியில் இருந்த காரம் வாய் முழுக்க பரவி விடும். இதனால் இன்னும் எரிச்சல் உணர்வு அதிகமாகும். உடனடியாக தண்ணீர் குடித்தால் வயிறு உப்புசம் ஏற்படலாம்.
கொழுப்பு நிறைந்த உணவுகள் : கொழுப்பு மிகுந்த உணவுகளை சாப்பிடும்போது ஏற்கனவே நம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். அத்துடன் உடனடியாக அதிக அளவில் தண்ணீர் குடித்தோம் என்றால் நம் வயிறு மந்தமாகிவிடும். இதனால் நீண்ட நேரம் செரிமானம் ஆகாமல் தவிக்க நேரிடும்.
கார்பனேட்டட் பானங்கள் : சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அல்லது கார்பனேடட் பானங்களை அருந்தக் கூடாது. இது வாயு பிரச்னை, வயிறு உப்புசம் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தும். மேலும், கார்பனேட்டட் பானங்கள் வயிறு முழுக்க நிரம்பி செரிமானக் கோளாறை ஏற்படுத்தும்.
முழு சாப்பாடு : வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகு உடனடியாக கடகடவென தண்ணீரை குடித்தால், ஏற்கனவே நிரம்பியுள்ள வயிற்றில் இன்னும் கூடுதல் தொந்தரவாக அமையும். அடுத்து எப்போது செரிமானம் ஆகும் என்ற ஏக்கத்தை நம் மனதில் வரவழைத்துவிடும்.
தண்ணீர் எப்போது அருந்தலாம் : சாப்பிட்ட உடனேயே அதிகப்படியான தண்ணீரை நீங்கள் அருந்தும் பட்சத்தில், நம் உடலானது செரிமானத்திற்கு வெளிப்படுத்திய அமிலங்கள் நீர்த்துப் போகும். இதனால் செரிமானம் இன்றி நாம் தவிக்க நேரிடும். இதேபோல பழ ஜூஸ் வகைகளையும் அருந்தக் கூடாது.
சாப்பிட்ட பிறகு குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரையில் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்தினால் நம் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள அது உதவியாக அமையும். அதேபோல உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தண்ணீர் அருந்தக் கூடாது. அதே சமயம், சாப்பிடும்போது தவிர்க்க முடியாத சூழலில் தண்ணீர் அருந்த வேண்டியிருந்தால் உதடுகள் நனையும் அளவு கொஞ்சமாக குடித்தால் போதுமானது.